ஒரே விமானத்தில் தமிழக முதல்வரும் தமிழக ஆளுநரும் பயணிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
சென்னையில் இருந்து கோவைக்கு நாளை காலை ஒரே விமானத்தில் தமிழக முதல்வரும், தமிழக ஆளுநரும் பயணிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 'மக்களுடன் முதல்வர்' என்ற திட்டத்தைத் தொடங்கி வைப்பதற்காக நாளை காலை 8:20 க்கு செல்லும் தனியார் விமானத்தில் தமிழக முதல்வர் கோவை செல்கிறார். அதே நேரம் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கோவை சென்று அங்கிருந்து சாலை மார்க்கமாக திருச்செங்கோடு செல்கிறார்.
இந்நிலையில் முதலமைச்சரும் ஆளுநரும் ஒரே விமானத்தில் செல்வது ஒரு குறிப்பிடத் தகுந்த விஷயமாக பார்க்கப்படுகிறது. ஆளுநருக்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கும் நிலையில் அண்மையில் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது தொடர்பாக பேச தமிழக முதல்வருக்கு ஆளுநர் அழைப்பு விடுத்திருந்தார்.
புயல் நிவாரண பணிகள் நடைபெற்று வருவதால் அதையெல்லாம் முடித்துவிட்டு கண்டிப்பாக ஆலோசிக்கலாம் என முதல்வர் தரப்பிலிருந்து ஆளுநருக்கு பதில் கொடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இருவரும் ஒரே விமானத்தில் பயணம் செய்வது குறிப்பிடத்தக்க விஷயமாக பார்க்கப்படுகிறது. கோவை செல்லும் தமிழக முதல்வர், அங்கு நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு அங்கிருந்து டெல்லி செல்ல இருக்கிறார். டெல்லியில் நடைபெற இருக்கும் 'இந்தியா' கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க இருக்கிறார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.