கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயிலில் மரபுகளையும், புனிதத்தையும் மீறி செயல்படும் தீட்சிதர்களை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சிதம்பரம் காந்தி சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் பாராளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
சிதம்பரம் கோயிலில் நடைபெறும் முறைகேடுகளையும், மரபுகளை மீறி செயல்படும் தீட்சிதர்களை கண்டித்தும், கோயிலை இந்து அறநிலையத் துறையின் கீழ் கொண்டு வர வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய தொல். திருமாவளவன் சிதம்பரம் பகுதியில் நீர்நிலை ஆக்கிரமிப்பு என்ற பெயரில் ஏழை மக்கள் குடியிருந்த 700- க்கும் மேற்பட்ட வீடுகளை இடித்து தரைமட்டமாக்கி உள்ளனர். அவர்களுக்கு போர்க்கால அடிப்படையில் வீடு கட்டி கொடுக்க வேண்டும். அதேபோல் சிதம்பரம் கோயிலில் ஆயிரங்கால் மண்டபத்தில் நடைபெற்ற ஆடம்பர திருமணத்திற்கு யார் அனுமதி கொடுத்தார்கள். இது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
சிதம்பரம் கோயிலை இந்து அறநிலைத்துறை கையகப்படுத்த வேண்டும். தமிழகத்தில் உள்ள பல கோயில்கள் இந்து அறநிலையத் துறையின் கீழ் இருந்தாலும், சில தனிநபர்களின் கட்டுப்பாடுகளில் உள்ளது. இதுகுறித்து தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.