அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உள்ள இராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரியில் பணியில் உள்ள பயிற்சி மருத்துவர்களுக்குப் பயிற்சி உதவித்தொகையினை நெடுங்காலமாக வழங்காமல், பயிற்சி மருத்துவர்களைக் கல்லூரி நிர்வாகம் வஞ்சித்து வருகிறது. இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் பயிற்சி மருத்துவர்களிடம் கேட்டபோது, “அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உள்ள இராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியை அரசே ஏற்ற பின்னரும் அரசுக் கல்லூரிகளில் வழங்கும் உதவித்தொகை (Stipend) 21,200 ரூபாய்/மாதம் வழங்காமல், 3000 ரூபாய்/மாதம் என நிர்ணயம் செய்து, அந்த சொற்ப தொகையினை கூட அளிக்காமல் பயிற்சி மருத்துவர்களைப் பெரும் இன்னல்களுக்கு உள்ளாக்கியுள்ளது. இந்தக் கரோனா சூழ்நிலையில் குறைந்த அளவு பயிற்சி மருத்துவர்களை வைத்து சம்பளம் வழங்காமல் அடிமை போல நடத்துவதைக் கண்டிக்கிறோம்.
கரோனா பாதிக்கப்பட்டவர்கள் அதிகரிக்கும் இந்த நிலையில், கரோனா பாதிப்பிலிருந்து பாதுகாக்க பயிற்சி மருத்துவர்களுக்கு N95 Mask, 3Layer Mask போன்ற எந்த முகக்கவசமும் அளிக்காமல் அநீதி இழைக்கிறது. மேலும், கரோனாவால் பாதிக்கப்படும் பயிற்சி மருத்துவர்களுக்கு உணவும், தனிமைப்படுத்திகொள்வதற்கு ஏற்ப அடிப்படை வசதிகளும் கூட செய்து தர மறுத்து தண்டித்து வருகிறது. அரசுக் கல்லூரியாக அறிவித்த பின்னரும் அரசுக் கல்லூரி போல் செயல்படாமல், எங்களிடம் பல மடங்கு அதிகமாக கல்விக் கட்டணத்தையும் வசூலித்துக்கொண்டு பயிற்சி மருத்துவர்களுக்குப் பெரும் துயரை அளிப்பதைக் கண்டித்து 6ஆம் தேதி முதல் பயிற்சி மருத்துவர்கள் கோரிக்கை நிறைவேறும் வரை காலவரையற்ற பணி புறக்கணிப்பு போராட்டத்தை அறிவித்துள்ளோம். அரசு உடனடியாக இராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியை சேர்ந்த பயிற்சி மருத்துவர்களுக்கு மற்ற கல்லூரிகளுக்கு நிகரான பயிற்சி ஊக்கத்தொகையை (Stipend) அளிக்க வேண்டும்.” என்று தெரிவித்தனர்.
மேலும், நிலுவையில் உள்ள தொகையினை தாமதிக்காமல் உடனே தர அறிவுறுத்துமாறும், முகக்கவசம், Quarantine போன்ற அடிப்படை வசதிகள் செய்து தர உத்தரவிட வேண்டும் எனவும் அரசு இராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி பயிற்சி மருத்துவர்கள் மற்றும் மாணவர் கூட்டமைப்பு கூறுகின்றனர். சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 350 பேருக்கு மேற்பட்ட நோயாளிகள் கரோனா வார்டில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தற்போது இவர்களுக்குப் பயிற்சி மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த நிலையில், பயிற்சி மருத்துவர்களும் மருத்துவமனைக்குச் செல்லவில்லை என்றால் கரோனா சிகிச்சை பெறும் நோயாளிகளின் உயிர் கேள்விக்குறியே? எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு பயிற்சி மருத்துவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்களும் அனைத்து தரப்பு மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.