Skip to main content

நடராஜர் கோவில் ஆணி திருமஞ்சன தேர்த் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

Published on 03/07/2024 | Edited on 03/07/2024
Chidambaram Nataraja Temple Aani Thirumanjanam Chariot Festival Begins

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற நடராஜர் கோயிலில் ஆணி திருமஞ்சன திருவிழாவை முன்னிட்டு நடராஜர் கோயிலில் சித்சபைக்கு எதிரே உள்ள கொடி மரத்தில் நேற்று காலை கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் உற்சவ ஆச்சாரியார் கிருஷ்ணசாமி தீட்சிதர் கொடியேற்றி உற்சவத்தை தொடங்கி வைத்தார். இதில் உள்ளூர், வெளியூர், வெளிமாவட்டம், வெளி மாநிலம், வெளிநாட்டைச் சார்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் மற்றும் பொதுமக்கள், சிவனடியார்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

அதனைத் தொடர்ந்து பஞ்சமூர்த்தி வீதி உலா நடைபெற்றது. 4 ஆம் தேதி வெள்ளி சந்திர பிறை வாகன வீதி உலா, 5ஆம் தேதி தங்க சூரிய பிறை வாகன வீதி உலா, 6ஆம் தேதி வெள்ளி பூதவாகன வீதி உலா, 7ஆம் தேதி வெள்ளி ரிஷப வாகன வீதிஉலா (தெருவடைச் சான்), 8-ஆம் தேதி வெள்ளி யானை வாகன வீதிஉலா, 9 ஆம் தேதி தங்க கைலாச வாகன வீதி உலா, 10ஆம் தேதி தங்க ரதத்தில் பிச்சாண்டவர் வீதி உலா நடைபெறுகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்த்திருவிழா  11ஆம் தேதி நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் ஏககால லட்சார்ச்சனை நடைபெறுகிறது.

12ஆம் தேதி அதிகாலை சூரிய உதயத்துக்கு முன்பு அதிகாலை 3 மணி முதல் 6 மணி வரை ஸ்ரீசிவகாம சுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜ மூர்த்திக்கு மகாபிஷேகம் நடைபெறுகிறது பின்னர், காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசிய பூஜையும், பஞ்சமூர்த்தி வீதி உலாவும் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து, பிற்பகல் 3மணிக்கு மேல் ஆனித் திருமஞ்சன தரிசனமும், ஞானகாச சித்சபா பிரவேசமும் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து 13ஆம் தேதி பஞ்ச மூர்த்திகள் முத்துப்பல்லக்கு வீதி உலாவும், 14ஆம் தெப்ப உற்சவத்துடன் விழா முடிவடைகிறது. ஆனி திருமஞ்சன திருவிழா ஏற்பாடுகளை நடராஜர் கோயில் பொது தீடச்சிதர்கள் செய்து வருகின்றனர். மேலும் பாதுகாப்பு ஏற்பாடுகளை சிதம்பரம் ஏஎஸ்பி ரகுபதி தலைமையில், நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

சார்ந்த செய்திகள்