கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் வருவாய் துறை சார்பில் பழங்குடி ஆதிவாசி மக்களுக்கு( இருளர்) சாதி சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிதம்பரம் வட்டாட்சியர் ஹரிதாஸ் தலைமை தாங்கினார். ஆதிதிராவிடர் பழங்குடி நலத்துறை தனி வட்டாட்சியர் ஜெயந்தி முன்னிலை வகித்தார். இதில் சிதம்பரம் சார் ஆட்சியர் விசுமகாஜன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பழங்குடி ஆதிவாசி மக்கள் (இருளர் இன மக்கள்) 163 பேருக்கு சாதி சான்றிதழும், 88 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டாவும், 18 பேருக்கு நலவாரிய அட்டையும் வழங்கினார்.
பின்னர் அவர் பேசுகையில், பழங்குடி ஆதிவாசி மக்கள், இந்த சாதி சான்றிதழை வைத்து தங்களது குழந்தைகளை பள்ளி அனுப்பி படிக்க வைக்க வேண்டும். மேலும் மாணவ, மாணவிகள் படித்து சமூகத்தில் உயர வேண்டும். பழங்குடி ஆதிவாசிகளுக்கு அரசின் சார்பில் 100- க்கும் மேற்பட்ட நலத்திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளது. இதை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வருவாய்த் துறை அதிகாரிகள் நேரடியாக தொடர் கொண்டு சலுகைகளையும் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றார். இந்த நிகழ்ச்சியில் வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் சிதம்பரம் அருகே உள்ள கிளை (தெற்கு) பகுதியில் வசிக்கும் பழங்குடி ஆதிவாசி மக்கள் சுமார் 500- க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.