கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே கூடுவெளிசாவடி கிராமத்தை சேர்ந்த கிராம ஏழை மக்கள் ஒரு தனியார் நுண்கடன் நிறுவனத்திடம் கடன் பெற்று தங்கள் வாழ்க்கையை நடத்தி வந்தனர்.
தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், அவர்கள் கடந்த 2 மாதமாக வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத ஒரு சூழலில் வேலை இல்லாமல் வீட்டில் முடங்கி உள்ளனர். இந்த நிலையில் நுண்கடன் நிறுவனத்தை சேர்ந்த ஊழியர்கள் கடன் பெற்றவர்களிடம் நுண்கடனை கட்ட கூறி எச்சரிக்கை செய்து கடனை வசூல் செய்து வருகிறார்கள். இதனால் வருமானமின்றி உள்ள பொதுமக்கள் அவதி அடைந்து வருகிறார்கள்.
மத்திய அரசு வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடம் கடன் வாங்கினால் முதல்முறை மூன்று மாதம் தள்ளி கட்டினால் போதும் என்றது. பின்னர் இன்னும் மூன்று மாதம் கூடுதல் அவகாசம் அளித்துள்ளது. இந்த நிலையில் நுண்கடன் நிறுவனங்கள் கிராமப்புறங்களில் உள்ள ஏழை மக்களிடம் இப்படி வாட்டி வதைப்பது மிகவும் வேதனையாக உள்ளது என கடன் பெற்ற பொதுமக்கள் கூறுகிறார்கள். இதற்கு சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.