சென்னை- சேலம் 8 வழி சாலை திட்டத்துக்கு எதிராக போராடியவர்கள் கைது செய்யப்பட்டது குறித்து சிபிசிஐடி விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை - சேலம் 8 வழி சாலை திட்டத்திற்கு தடை விதிக்க கோரி பொது நல வழக்குகள், நில உரிமையாளர்கள் என பலர் வழக்குகளை தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்குகள் சிறப்பு அமர்வு நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்பராயன் அமர்வு விசாரித்து வருகிறது.
இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, இத்திட்டத்தை எதிர்த்து பொதுநல வழக்கு தொடர முடியாது என்றும், திட்டப்பணிகள் முழுமை பெறுவதற்கு முன்பாகவே வழக்குகள் தொடரப்பட்டுள்ளது என்றும், சுற்றுசுழல் அமைச்சகத்தின் அனுமதி இல்லாமல் நிலம் கையகப்படுத்துவது போன்ற பணிகளை தொடங்க மாட்டோம் என்றும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், பசுமை வழிசாலை என்பது பசுமை நிறைந்த சாலை என கருத முடியாது என்றும், புதிய நெடுஞ்சாலையை தான் பசுமை வழி சாலை என கூறப்படுவதாகவும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தமிழக அரசு தரப்பில் தமிழகத்தில் உள்ள பல்லுயிர் வகைகளை பாதுகாக்க கடந்த மார்ச் மாதம் பல்லுயிர் மேலாண்மை குழுக்கள் அமைக்கப்பட்டிருப்பதாகவும், ஆனால் உள்ளாட்சி அமைப்புகளில் பிரதிநிதிகள் இல்லாததால் அவை செயல்படவில்லை என அரசு தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார். தமிழக அரசின் இந்த விளக்கத்தை மனுவாக தாக்கல் செய்ய நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
பின்னர் 8 வழி சாலை திட்டத்தை எதிர்த்து போராடியபோது மனித உரிமை மீறலுக்கு ஆளான சேலம் கோட்டையூர் முத்துக்குமார், சேலம் சூரியகவுண்டர்காடு மாரியப்பன், கிருஷ்ணகிரி அத்திப்பாடி மல்லிகா மற்றும் சௌந்தர் ஆகியோருக்கு போதிய இழப்பீட்டை வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட கோரிய வழக்கு வழக்கை விசாரித்த நீதிபதிகள், பொதுமக்கள் கைதுக்கு இன்று கடும் கண்டனம் தெரிவித்தனர். அவர்கள் மீது பதியப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையை ஏன் ரத்து செய்ய கூடாது என கேள்வி எழுப்பினர்.
பின்னர், பொதுமக்கள் கைது குறித்து சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், அதன் அறிக்கையை நவம்பர் 30ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.சென்னை - சேலம் 8 வழி சாலை வழக்கின் விசாரணையை நவம்பர் 16ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.