43வது சென்னை புத்தகத் திருவிழா சென்னை நந்தனம் ஒய். எம். சீ. ஏ. மைதானத்தில் ஜனவரி 9ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. ஆண்டுதோறும் சென்னையில் நடைபெறும் புத்தகக் காட்சியின்போது கல்லூரி மற்றும் பள்ளி மாணவி மாணவர்களுக்கு பேச்சு மற்றும் கட்டுரைப் போட்டிகள் நடத்தி, அவர்களிடையே வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்துவதற்காக புத்தகங்களையும், கலந்துகொள்வோர் அனைவருக்கும் சான்றிதழ்களையும் பபாசி வழங்கி வருகிறது. அந்த வகையில் இந்த வருடம் ''சென்னை வாசிக்கிறது'' என்ற நிகழ்ச்சியை பபாசி நடத்தியது.
06.01.2019 திங்கள்கிழமை காலை சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் ஒரே நேரத்தில் புத்தகம் வாசிக்கும் ''சென்னை வாசிக்கிறது'' நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை பபாசி நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர். இதில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் ஆயிரக்கணக்கில் கலந்து கொண்டனர். சென்னை மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி, நக்கீரன் ஆசிரியர் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, மாணவர்களுக்கு புத்தக வாசிப்பின் அவசியம் குறித்து விளக்கி பேசினர்.
இந்த நிகழ்ச்சியில் பபாசி தலைவர் ஆர்.எஸ்.சண்முகம், செயலாளர் எஸ்.கே.முருகன், பொருளாளர் கோமதி நாயகம், துணைத் தலைவர் ஒளி வண்ணன், துணைத் தலைவர் நாகராஜன், இணைச்செயலாளர் சுரேஷ், நிர்வாகக் குழு உறுப்பினர்கள் முத்துசாமி, சாமிநாதன், முனிசாமி மற்றும் ''சென்னை வாசிக்கிறது' நிகழ்ச்சியை முன்னின்று நடத்திய சாக்கரடீஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.