கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் ஆண்டுதோறும் சித்ரா பௌர்ணமி சமையல் திருவிழா மிக பிரம்மாண்டமாக நடைபெறும். கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா பரவல் காரணமாகத் திருவிழா தடை செய்யப்பட்டிருந்தது. தற்போது திருவிழா நடத்துவதற்கு அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், கூத்தாண்டவர் கோயில் திருவிழா களைக்கட்டத் துவங்கியுள்ளது.
இந்தத் திருவிழாவில் லட்சக்கணக்கான திருநங்கைகள் வந்து கலந்து கொள்வார்கள். இந்தக் கூவாகம் கோவில் அரவான் களப்பலி திருவிழா தொடங்குவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே பல மாநிலங்களிலிருந்தும் வருகை தரும் திருநங்கைகள் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை ஆகிய நகரங்களில் உள்ள விடுதிகளில், திருமண மண்டபங்களில் தங்கிக் கொள்வார்கள். பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் திருநங்கைகள் ஆண்டுக்கு ஒரு முறை ஒரே இடத்தில் கூடுவதால் உறவினர்களைச் சந்தோசத்துடன் பரஸ்பரம் விசாரித்து, அவர்களோடு விருந்து சாப்பிடுவது என சந்தோஷமாக இருப்பார்கள்.
இந்த திருவிழாவில் திருநங்கைகள் அழகிப்போட்டி மற்றும் நடனம் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்துவது வழக்கம். இந்த நிகழ்ச்சிகளில் மிக முக்கியமானது மிஸ் கூவாகம் அழகிப் போட்டி. இந்த ஆண்டுக்கான மிஸ் கூவாகம் தேர்ந்தெடுப்பது உட்பட பல்வேறு கலை நிகழ்ச்சிகளை தமிழ்நாடு அரசு எய்ட்ஸ் கட்டுப்பாட்டுச் சங்கம், சென்னை திருநங்கைகள் அமைப்பு ஆகியவற்றின் சார்பில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிகளில் அமைச்சர் பொன்முடி, எம்பிகள் திருச்சி சிவா, விழுப்புரம் ரவிக்குமார், எம்.எல்.ஏக்கள் புகழேந்தி, டாக்டர் லட்சுமணன், திரைப்பட நடிகர் சூரி, நடிகை நளினி உட்படப் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் சூரி, ‘திருநங்கைகள் தற்போது சொந்த உழைப்பில் முன்னேறி மக்கள் மத்தியில் பெரும் மதிப்பைப் பெற்று வருகிறார்கள். ஆசிரியர்களாக, தகவல் தொழில்நுட்ப வல்லுனர்களாக, நீதித்துறை, காவல்துறை, பேராசிரியர் என்று பல்வேறு துறைகளிலும் இடம் பெற்று மிகத் திறமைசாலிகளாக சமூகத்தில் பெரும் மதிப்பைப் பெற்று வாழ்ந்து வருகிறார்கள்.
வேலூர் மாவட்டத்தில் ஒரு திருநங்கை உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் வாக்களித்து வெற்றி பெற்றுள்ளார் என்பதே அதற்கு சாட்சி. பொதுமக்கள் திருநங்கைகளை நம்மில் ஒருவராகக் கருதவேண்டும். அவர்களைச் சுதந்திரமாகச் செயல்படவிட வேண்டும். இதன் மூலம் அனைத்துத் துறைகளிலும் அவர்கள் சாதனை படைப்பார்கள்; படைக்க வேண்டும் படைத்தும் வருகிறார்கள்’ இவ்வாறு நடிகர் சூரி பேசினார்.
விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் நடந்த இந்த விழாவில் மிஸ் கூவாகம் அழகிப் போட்டி நடைபெற்றது. இதில் 30க்கும் மேற்பட்ட திருநங்கைகள் கலந்து கொண்டனர். அவர்களில் சென்னையைச் சேர்ந்த சாதனா என்பவர் இந்த ஆண்டு (2022) மிஸ் கூவாகமாக முதலிடத்தைப் பிடித்தார். இரண்டாவது இடத்தை சென்னையைச் சேர்ந்த மதுமிதா, மூன்றாவது இடத்தை திருச்சியைச் சேர்ந்த எல்சா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மிஸ் கூவாகம் சாதனாவிற்கு கிரீடம் சூட்டப்பட்டது. விழாவில் ஆயிரக் கணக்கான திருநங்கைகள் வண்ண வண்ண உடைகளை உடுத்திக் கொண்டு பரதநாட்டியம், திரைப்படப் பாடல் என நிகழ்ச்சியைக் கலகலக்க வைத்தனர்.