Skip to main content

சென்னை மெட்ரோ ரயில் 2ஆம் கட்ட திட்டம் - மத்திய அமைச்சரவை ஒப்புதல்!  

Published on 03/10/2024 | Edited on 03/10/2024
Chennai Metro Rail Phase 2 Project - Central Cabinet approves

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடியைக் கடந்த செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி (27.09.2024) சந்தித்துப் பேசினார். அப்போது அவர், ‘சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல் கட்ட பணிகள் மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து செயல்படுத்தியது போலவே, இரண்டாவது கட்ட பணிகளையும் செயல்படுத்தவேண்டும் என்பது தமிழ்நாட்டின் நிலைப்பாடு. இந்த இரண்டாவது கட்ட பணிகள் காலதாமதமின்றி மேற்கொள்வதற்காக, 2019ஆம் ஆண்டு, மாநில அரசின் நிதியிலிருந்தும், கடன் பெற்று பணிகளைத் துவக்கி, பின்பு மத்திய அரசோடு இணைந்து செயல்படுத்தும் திட்டமாகச் செயல்படுத்துவதற்கு ஒப்புதல் பெறுவதற்கு முடிவு செய்யப்பட்டது. மத்திய உள்துறை அமைச்சர் இதனை ஏற்றுக்கொண்டு, 2020ஆம் ஆண்டில் இதற்கு அடிக்கல் நாட்டி பணிகள் துவங்கப்பட்டது.

மத்திய நிதி அமைச்சர், இதற்கான மத்திய அரசின் நிதி ஒதுக்கப்படும் என்று 2021-2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அறிவித்தார். இதைத் தொடர்ந்து, மத்திய அரசின் திட்ட முதலீட்டு வாரியம் இதற்கான ஒப்புதலை, 2021ஆம் ஆண்டே வழங்கியது. இந்தப் பணிகளுக்கு, இதுவரை 18 ஆயிரத்து 564 கோடி ரூபாய் செலவிடப்பட்டிருந்தாலும், இதுவரைக்கும் மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் வழங்கப்படாத காரணத்தால், இதற்கான மத்திய அரசின் நிதி, தமிழ்நாடு அரசுக்கு வழங்கப்படவில்லை. இதனால், மெட்ரோ ரயில் திட்டப் பணிகளில் தொய்வு ஏற்பட்டிருக்கிறது. எனவே, தாமதமின்றி இந்த நிதியை உடனடியாக வழங்கப்படவேண்டும் என்று நான் கேட்டிருக்கிறேன்” எனக் கூறியதாகத் தெரிவித்திருந்தார்.

Chennai Metro Rail Phase 2 Project - Central Cabinet approves

இந்நிலையில் மூன்று வழித்தடங்களை உள்ளடக்கிய சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்து மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறும்போது, ​​“சென்னை மெட்ரோ ரயிலின் 2ஆம் கட்ட திட்டத்துக்கு ரூ. 63 ஆயிரத்து 246 கோடியில் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. சென்னை மிக வேகமாக வளர்ந்து வரும் நகரமாகவும், முக்கியமான பொருளாதார மையமாகவும் உள்ளது. 119 கி.மீ. நீளமுள்ள 2 ஆம் கட்டத் திட்டம் 3 தாழ்வாரங்களாகப் பிரிக்கப்பட்டு 120 மெட்ரோ ரயில் நிலையங்களைக் கொண்டிருக்கும். அதிகமான மக்கள் தங்கள் வீடுகளிலிருந்து நடந்து செல்லும் தூரத்தில் மெட்ரோவைப் பயன்படுத்த முடியும். அதற்காக 120 மெட்ரோ ரயில் நிலையங்கள் உள்ளன. ஜப்பான் நாட்டின் தலைநகர் டோக்கியோவின் பார்த்தால், ஒவ்வொரு இடத்திலிருந்தும் நடந்து செல்லும் தூரத்தில் மெட்ரோ ரயிலில் பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும். இதே போன்ற அமைப்பு சென்னை மெட்ரோவில் பயன்படுத்தப்படும்” எனத் தெரிவித்தார். 

சார்ந்த செய்திகள்