'நிவர்' புயல் காரணமாக மெட்ரோ சேவைகள் இன்று இரவு 7 மணிமுதல் நிறுத்தப்படும் என அறிவிப்பு வெளியாகி இருந்த நிலையில், தற்போது இன்று இரவு 7 மணி முதல் நாளை காலை 7 மணி வரை சென்னை விமானநிலையம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளதாக விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அதேபோல், சென்னையில் இருந்து நாளை கோயம்புத்தூர், மதுரை, மேற்கு வங்கம் செல்லும் சிறப்பு ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 'கோவை-சென்னை', 'மதுரை-சென்னை' உள்ளிட்ட ரயில்களும் ரத்து செய்யப்படுகிறது. மேலும், செம்பரம்பாக்கம் ஏரியில் முதல் கட்டமாக 1,500 கனஅடி நீர் திறக்கப்பட்ட நிலையில், தற்போது நீர் திறப்பு அளவு 3,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. இன்று மாலை 6 மணி முதல் கூடுதலாக 2 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட இருப்பதால் வினாடிக்கு 5,000 கனஅடி நீர் திறக்கப்படும் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
அதேபோல் பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவான 35 அடியில், தற்போது 30 அடி நீர்மட்டம் எட்டியதால், திருவள்ளூர் ஆட்சியர் பொன்னையா மற்றும் கண்காணிப்பு அலுவலர் பாஸ்கரன் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.