Skip to main content

கலைஞர் சிலை திறக்க அனுமதி கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

Published on 03/11/2020 | Edited on 03/11/2020

 

chennai mathavaram kalaignar statue chennai high court tn govt

 

சென்னை மாதவரத்தில், மறைந்த முதல்வர் கருணாநிதியின் வெண்கலச் சிலையை திறக்க அனுமதிப்பது தொடர்பாக பதிலளிக்க வேண்டும் என, தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

மாதவரம் கொசப்பூரில் உள்ள தனது நிலத்தில் நிறுவப்பட்டுள்ள கருணாநிதியின் சிலையைத் திறக்க அனுமதிக்கக்கோரி, தி.மு.க. பொதுக்குழு உறுப்பினரும், வழக்கறிஞருமான எம்.நாராயணன்,  சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

 

இந்த வழக்கு, கடந்த முறை நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா முன்பு விசாரணைக்கு வந்தபோது, தனி நபர் ஒருவருக்குச் சொந்தமான பட்டா நிலத்தில் சிலைகளை வைத்துகொள்ள அனுமதி வழங்கி, உச்சநீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்புகளை தாக்கல் செய்ய, மனுதாரர் தரப்புக்கு உத்தரவிட்டிருந்தார்.

 

இந்நிலையில், இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் உச்சநீதிமன்ற தீர்ப்புகள் தாக்கல் செய்யப்பட்டன.

 

தமிழக அரசு தரப்பில், தனி நபரின் பட்டா நிலத்தில் சிலை வைத்துக்கொள்ள உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தாலும், மாநில அரசின் முறையான அனுமதி பெறாமல் சிலை வைக்கக்கூடாது என  ஏற்கனவே அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டது.

 

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தமிழக அரசின் அரசாணை மற்றும் சிலை திறக்க அனுமதிப்பது தொடர்பாக, நவம்பர் 26-ஆம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டார். 

 

 

சார்ந்த செய்திகள்