சென்னை கொடுங்கையூர் பகுதியில் உள்ள சேலைவாயல் தென்றல் நகரைச் சேர்ந்தவர் சூர்யா (வயது 36). குஜராத் மாநிலம் சூரத் மாவட்டம் அம்ரோலி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கள்ள ரூபாய் நோட்டுகளை மாற்ற முயன்ற வழக்கில் சென்னை கொடுங்கையூர் பகுதியில் சூர்யா பதுங்கி இருப்பதாக குஜராத் போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் அவரை தேடி சென்னை வந்தனர்.
இந்நிலையில் சென்னை வந்த குஜராத் மாநில போலீசார் கொடுங்கையூர் போலீஸ் உதவியுடன் நேற்று சூர்யாவை பிடித்து கைது செய்தனர். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் கள்ள நோட்டுகள் அச்சடிக்கப் பயன்படுத்தும் இயந்திரம் மற்றும் கள்ள நோட்டுகளை மணலியில் உள்ள கோவிந்தசாமி தெருவில் வசித்து வரும் தனது சகோதரி வீட்டில் பதுக்கி வைத்திருப்பதாக தெரிவித்தார்.
இதையடுத்து குஜராத் மாநில போலீசாரும் கொடுங்கையூர் போலீசாரும் இணைந்து மணலியில் உள்ள அவரது சகோதரி வீட்டில் இருந்து 7 லட்ச ரூபாய் மதிப்புள்ள 500 ரூபாய் கள்ள நோட்டுகள் மற்றும் கள்ள நோட்டுகளை அச்சடிக்கப் பயன்படுத்தி வந்த 2 அச்சு இயந்திரங்களைப் பறிமுதல் செய்தனர். இச்சம்பவம் கொடுங்கையூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.