சென்னை ஐஐடி-யில் 2006- ஆம் ஆண்டு முதல் நடந்த 14 மாணவர்களின் தற்கொலைகள் தொடர்பான வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் கேரளாவைச் சேர்ந்த லோக் தந்திரிக் ஜனதா தள கட்சி பொது நல வழக்கு தொடர்ந்துள்ளது.
சென்னை ஐஐடி-யில் படித்துவந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த மாணவி பாத்திமா லத்தீப் நவம்பர் 9-ஆம் தேதி விடுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். மன அழுத்தத்தில் பாத்திமா இருந்ததாக அவருடன் இருந்த சக மாணவிகள் தெரிவித்ததாக விடுதி காப்பாளர் லலிதாதேவி கொடுத்த புகாரின் அடிப்படையில், கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் சந்தேக மரணம் என்ற பிரிவில் பதிவான வழக்கை சென்னை மத்திய குற்றப்பிரிவு விசாரித்து வருகிறது. இதுதவிர, மற்ற மாணவ மாணவிகள் தொடர்பான வழக்குகள் சிபிசிஐடி விசாரணையில் உள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்நிலையில், 2006 முதல் 14 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளதால், அந்த வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி லோக் தந்திரிக் ஜனதா தள கட்சியின் இளைஞரணி தேசிய தலைவரான கேரளா கோழிக்கோட்டை சேர்ந்த சலீம் மடவூர் என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார்.
பாத்திமா லத்தீப்பின் பெற்றோர் தமிழக, கேரள காவல்துறையிடம் உரிய விசாரணை கோரி புகார் அளித்துள்ளதையும், சிபிஐ விசாரணை கோரி நவம்பர் 18-இல் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார். ஆந்திராவைச் சேர்ந்த 5 பேர், தெலுங்கானாவைச் சேர்ந்த 3 பேர், கேரளாவைச் சேர்ந்த 3 பேர் உள்ளிட்ட 14 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக ஜாதி ரீதியாகவும், மத ரிதியாகவும், ஆங்கில புலமைபெற்றவர்களாலும் துன்புறுத்தப்பட்டுள்ளார்கள் என்றும், பட்டியிலின மற்றும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அதிகளவில் துன்புறுத்தல்களும், கொடுமைகளும் நடந்து வருவதாகும் அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் ஐஐடி-யில் சுமார் 70 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சரே பாராளுமன்றத்தில் பேசி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். தமிழக அரசின் கட்டுப்பாட்டிலுள்ள சிபிசிஐடி காவல் துறை விசாரித்தால், இந்த வழக்கின் உண்மைத்தன்மை வெளியே வராது என்பதால், அந்த வழக்குகளை சிபிஐ-க்கு மாற்ற உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் தெரிவித்துள்ளார். இந்த மனு அடுத்த வாரம் விசாரணைக்கு வரவுள்ளது.