சந்தனக் கடத்தல் வீரப்பனைச் சுட்டு வீழ்த்திய அதிரடிப் படையினருக்கு வழங்கப்பட்ட இரட்டை பதவி உயர்வு அரசாணையை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த 2004-ஆம் ஆண்டு, அதிரடிப் படையினரால் வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்டார். அப்போது, அதிரடிப் படையில் பணிபுரிந்த 752 பேருக்கு, அன்றைய முதல்வர் ஜெயலலிதா, இரட்டை பதவி உயர்வு வழங்கினார். அதன்பிறகும், அந்த 752 பேருக்கும் பணிமூப்பு வழங்கப்பட்டது. அதனால், அதிரடிப் படையில் இடம்பெறாத மற்ற அதிகாரிகள் பாதிக்கப்பட்டனர். எனவே, 2007-ஆம் ஆண்டு, அவர்களுக்கு பணிமூப்பு வழங்கிய தி.மு.க ஆட்சி, மற்றொரு அரசாணை பிறப்பித்தது. உடனே, அந்த அரசாணைக்கு எதிராக, அதிரடிப் படையினர் சார்பில் வழக்குத் தொடரப்பட்டது.
அந்த வழக்கு நிலுவையில் இருந்தபோது, 2013-ஆம் ஆண்டு, இரண்டாவது பணி மூப்பை அதிரடிப் படையினருக்கு வழங்கும் விதத்தில், காவல்துறை சர்வீஸ் விதிகளில் திருத்தம் கொண்டுவந்ததோடு, புது அரசாணையும் பிறப்பித்தனர். சென்னை உயர் நீதிமன்றத்தில் இதனை எதிர்த்து மீண்டும் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பார்த்திபன், 2013-ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்துசெய்து, தற்போது உத்தரவிட்டுள்ளார். அதில், ‘இரட்டை பதவி உயர்வு என்பது அரசியல் சாசனத்திற்கு முரணானது. ஒருமுறை பதவி உயர்வு வழங்கியதே சரி’ என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.