Skip to main content

மருத்துவ படிப்பில் ஓபிசி-க்கு 50 சதவீத இடஒதுக்கீடு கோரிய வழக்கில் 27-ஆம் தேதி தீர்ப்பு!

Published on 17/07/2020 | Edited on 17/07/2020
chennai highcourt

 

மருத்துவப் படிப்பிற்கான அகில இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு கோரி,  தமிழக அரசியல் கட்சிகள் தொடர்ந்த வழக்குகளின் விசாரணையை முடித்த சென்னை உயர் நீதிமன்றம், ஜூலை 27-ல் தீர்ப்பு வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

 

மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கக்கோரி,  திராவிடர் கழகம், திமுக, அதிமுக, பாமக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் தமிழக அரசு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டிருந்தன.

 

இந்த வழக்கில், மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு வழங்கக் கோரி தொரடப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் ஜூலை 8-ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது. உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டால் 27 % இடஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், மருத்துவப் படிப்புகளில் அந்தந்த மாநிலங்களில் பின்பற்றப்படும் இடஒதுக்கீட்டு முறையை பின்பற்ற அனுமதிக்கலாம்.  ஆனால், அந்த இடஒதுக்கீடு மொத்த இடங்களில் 50 சதவீதத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டு இருந்தது.

 

இந்த வழக்குகள்,  தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி,  நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் ஆஜரானார்கள். திமுக - பி.வில்சன், அதிமுக - ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், பாமக - கே.பாலு, மார்க்சிஸ்ட் - ஸ்டாலின் அபிமன்யு, தனி மனுதாரர் ஒருவருக்கு தினேஷ்குமார் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.

 

அவர்களது வாதத்தில், உச்சநீதிமன்ற தீர்ப்பு மற்றும் இந்திய மருத்துவ கவுன்சில் விதிப்படி, இட ஒதுக்கீடு தொடர்பாக மாநில அரசு சட்டம் இயற்றாமல் இருந்தால் மட்டுமே மத்திய அரசு முடிவெடுக்க முடியும் என்றும், மத்திய அரசு கவுன்சிலிங் நடத்தும் அமைப்பு மட்டுமே என்றும், இட ஒதுக்கீடு தொடர்பாக முடிவெடுக்க மாநில அரசுகளுக்கே முழு அதிகாரம் உள்ளதாக வாதிட்டனர்.

 

கடந்த 4 வருடங்களில் 3580 இடங்கள் மத்திய அரசுக்கு வழங்கப்பட்டன. இடஒதுக்கீடு வழங்காததால் 2700-க்கும் மேற்பட்ட ஓபிசி தமிழக மாணவர்கள் இடம் பறிபோயின.  இட ஒதுக்கீடு விவகாரத்தில் மாநில அரசின் உரிமைகளை, மத்திய அரசு திருடிக் கொண்டிருக்கிறது என்று திமுக தரப்பில் வில்சன்  குற்றம் சாட்டினார்.

 

தமிழக அரசு தரப்பில் அரசு தலைமை வழக்கறிஞர் விஜய்நாராயண் ஆஜராகி, தமிழகத்தில் 69% இடஒதுக்கீடு முறை இருக்கும்போது,  மத்திய அரசு 27% இடஒதுக்கீடு வழங்குவது தவறானது. தமிழகத்தில்தான் அதிகளவில் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் உள்ளனர். மாநிலத்திலும், சாதி வாரியான மக்கள் தொகையின் அடிப்படையில் 50% என்ற இடஒதுக்கீட்டை அதிகரிக்கலாம் என உச்சநீதிமன்றமே தெரிவித்துள்ளது. பட்டியலின பழங்குடியின பிரிவினருக்கு மட்டும் இட ஒதுக்கீடு வழங்கிவிட்டு, இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு இட ஒதுக்கீடு மறுப்பது சட்ட விரோதமானது என்று வாதிட்டார்.

 

மாணவர்களின் நலன் கருதி வரலாற்றிலேயே முதல் முறையாக ஆளும் கட்சி, எதிர் கட்சி என அனைத்து அரசியல் கட்சிகளும் மத்திய அரசுக்கு எதிராக உள்ளதாக, அரசு தலைமை வழக்கறிஞர் விஜய்நாராயண் தெரிவித்தார்.

 

இந்திய மருத்துவ கவுன்சில் தரப்பில் பி.ஆர்.ராமன், மத்திய அரசு தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சங்கரநாராயணன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். மத்திய அரசு வாதத்தில், மருத்துவ மேற்படிப்புகளில் இட ஒதுக்கீடு முறையை பின்பற்றக்கூடாது என  இந்திய மருத்துவ கவுன்சில் விதி உள்ளது.  மெரிட் எனப்படும் தகுதியின் அடிப்படையில் மட்டுமே மாணவர்களுக்கு இடம் ஒதுக்கப்படும். அதே நேரத்தில், உச்சநீதிமன்ற உத்தரவுப்படியே, எஸ் சி/எஸ்.டி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. மருத்துவ மேற்படிப்புகளில் ஒபிசி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க அவசியமில்லை என்பதற்கான உயர் நீதிமன்ற மற்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் பல உள்ளன. அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் நிரம்பாமல் இருந்தால் மட்டுமே,  தமிழக அரசுக்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

 

பின்னர்  நீதிபதிகள்,  மாநில அரசுகளின் ஒதுக்கீட்டு முறையைப் பின்பற்ற வேண்டும் என்ற முந்தைய உச்சநீதிமன்ற உத்தரவுகளுக்கு ஏன் மத்திய அரசு கட்டுப்படவில்லை எனக் கேள்வி எழுப்பினர். பின்னர் வழக்கின் மீதான தீர்ப்பு ஜூலை 27 –ம் தேதி அறிவிக்கப்படும் எனத் தெரிவித்து தீர்ப்பை ஒத்திவைத்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்