“வேளாளர் என்கிற சமூகத்தின் பெயர் பிரச்சினையில், ஜனநாயக ரீதியாகப் போராட்டம் நடத்திய வ.உ.சி பேரவையினர் மீது தாக்குதல் நடத்தியவர்களைக் கடுமையான நடவடிக்கைக்கு உள்ளாக்க வேண்டும்." எனக் கூறியிருக்கிறார் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள விரிவான அறிக்கையில், “நேற்று 20ஆம் தேதி மதுரை அலங்காநல்லூரில் காவல்துறை அனுமதியோடு வ.உ.சி பேரவை நடத்திய போராட்டத்தில், மர்ம நபர்கள் கல்வீசித் தாக்குதலை நடத்தியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. கடும் கண்டனத்திற்குரியது. வேளாளர் பெயர் பிரச்சினையில் தங்கள் தரப்பு உரிமைகளை தமிழக அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்ல, அறவழியில் போராடும் வேளாள சமுதாயத்தினரை தாக்கி, அரசியல் லாபத்திற்காக சாதி மோதல்களை உருவாக்க, சிலர் திட்டமிட்டிருப்பது வெட்ட வெளிச்சமாகி இருக்கிறது.
தமிழக முதலமைச்சர் அவர்கள் ஏழு சமுதாயங்களை ஒருங்கிணைத்து தேவேந்திர குல வேளாளர் என்ற பெயரில் அழைக்க பரிந்துரை செய்வதாகக் கூறியதன் விளைவே இதற்குக் காரணம். வேளாளர் சமுதாயத்தினரின் உணர்வுப்பூர்வமான விஷயத்தில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் கொஞ்சம் கூட யோசிக்காமல் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று முடிவெடுத்து தமிழகத்தின் அமைதியைச் சீர்குலைத்து இருக்கிறார். தமிழக முதலமைச்சரின் பரிந்துரையால் பாதிக்கப்பட்ட மக்கள் போராடுவது ஜனநாயக உரிமை. அப்படி நடத்தப்படும் போராட்டத்தை சாதிக் கலவரமாக மாற்ற முயற்சிப்பவர்களை அடையாளம் கண்டு தமிழக காவல்துறை கைது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காவல்துறை அனுமதி வாங்கி நடத்தப்பட்ட போராட்டத்தில் மர்ம நபர்கள் கல்வீசித் தாக்குதல் நடத்தியதற்கு தமிழக அரசே முழு பொறுப்பேற்க வேண்டும். தமிழக அரசு கல்வீசித் தாக்குதலில் ஈடுபட்ட மர்ம நபர்கள் மீது கடுமையான நடவடிக்கையை எடுப்பதோடு மட்டுமல்லாமல் இதுபோன்ற நிகழ்வுகள் இனிமேல் நடக்காமல் தடுக்க வேண்டும்." எனக் கூறியுள்ளார்.