டி.என்.பி.எஸ்.சி சிவில் நீதிபதி தேர்வு கடந்த ஆண்டு நடைபெற்ற நிலையில், சமீபத்தில் தேர்வு முடிவுகள் வெளியானது. இந்த தேர்வில் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த ஸ்ரீபதி என்ற பழங்குடியின பெண் வெற்றி பெற்று சிவில் நீதிபதியாக தேர்வாகியுள்ளார். ஏழ்மையிலும் கல்வி கற்று பி.ஏ.பி.எல் சட்டப்படிப்பை முடித்தார். சட்டப்படிப்பு படிக்கும் போது ஸ்ரீபதிக்கு திருமணமான நிலையில் ஒரு குழந்தை உள்ளது. இந்த நிலையில் ஸ்ரீபதி தமிழ்நாட்டின் முதல் பழங்குடியினர் பெண் சிவில் நீதிபதியாக தேர்வாகியுள்ளார்.
வலி மிகுந்த ஸ்ரீபதியின் வெற்றிப்பாதையை போன்றே, மார்ஷல் ஏசுவடியான் என்பவரின் வெற்றியும் பலராலும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதற்கு காரணம் அவரது அப்பா லூர்து பிரான்சிஸின் படுகொலை. தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு வி.ஏ.ஓவாக பணியாற்றி வந்த லூர்து பிரான்சிஸ், அங்கு நடைபெறும் மணல் கொள்ளையை தடுப்பதில் படுதீவிரமாக செயல்பட்டு வந்தார். அதனால் ஆத்திரமடைந்த மணல் கடத்தல் கும்பல் லூர்து பிரான்சிஸை அலுவலகத்தில் புகுந்து சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்தது. இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட இருவருக்கும் நீதிமன்றம் ஆயுள்தண்டனை கொடுத்து சிறையில் அடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கடந்த ஆண்டு நடைபெற்ற சிவில் நீதிபதி தேர்வை எழுதிய மார்ஷல் ஏசுவடியான் நீதிபதியாக தேர்வாகியுள்ளார். எனது தந்தை, உன்னை நீதிபதியாக பார்க்க வேண்டும் என சொல்லிக்கொண்டே இருப்பார். அவர் படுகொலை செய்யப்பட்ட 5 ஆவது நாள் சிவில் நீதிபதி தேர்வு அறிவிப்பு வந்தது. எனது தந்தையின் கனவை நிறைவேற்ற தேர்வுக்கு விண்ணப்பித்தேன். இப்போது வெற்றியும் பெற்றுவிட்டேன். அவரது ஆசையை நிறைவேற்றியதில் மகிழ்ச்சியாக உள்ளது” என மார்ஷல் ஏசுவடியான் நெகிழ்ச்சியாக பேசியுள்ளார். மார்ஷல் ஏசுவடியானுக்கு அரசியல் தலைவர்கள் எனப் பலரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.