Skip to main content

வெளிநாடுகளில் தவிக்கும் தமிழர்களை ‘வந்தே பாரத்’ திட்டத்தில் மீட்கக்கோரிய வழக்கு ஒத்திவைப்பு!

Published on 05/06/2020 | Edited on 06/06/2020
chennai highcourt

 

வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை  ‘வந்தே பாரத்’ திட்டத்தின் கீழ் மீட்டுவர, மத்திய-மாநில அரசுகளுக்கு உத்தரவிடக்கோரி தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.


சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் ராஜா முகமது தாக்கல் செய்துள்ள மனுவில், கரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்தியாவில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாகவும், சர்வதேச விமான சேவைகள் ரத்து காரணமாகவும், இந்தியாவிற்கு வரமுடியாமல் வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்க, மத்திய அரசு 'வந்தே பாரத்'  திட்டத்தை துவங்கியது.

வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்கள்,  அந்தந்த நாட்டில் உள்ள இந்திய தூதரகங்கள் மூலம் தாய்நாடு செல்ல விரும்புபவர்களின் தகவல்கள் சேகரிக்கப்பட்டு, அவர்களில் கர்ப்பிணிகள், முதியவர்கள், வேலை இழந்தவர்கள் உள்ளிட்டோர்,  முன்னுரிமை அடிப்படையில் அழைத்து வரப்படுகின்றனர்.

 

 


இதனடிப்படையில்  ‘வந்தே பாரத்‘ திட்டம் தொடங்கப்பட்டு, யு.ஏ.இ., கத்தார், ஓமன், குவைத் உள்ளிட்ட வளைகுடா நாடுகளிலிருந்தும், மலேசியா, சிங்கப்பூரிலிருந்தும் இந்தியர்கள் தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளனர். ஆனால், வந்தே பாரத் திட்டத்தின் கீழ் இந்தியாவுக்கு அழைத்து வரப்படும் விமான நிலையங்களின் பட்டியலில் தமிழக விமான நிலையங்கள் எதுவும் இல்லாத காரணத்தால், அங்கு சிக்கித் தவிக்கும் தமிழர்கள் நாடு திரும்ப முடியாமல் தவிக்கின்றனர். வந்தே பாரத் திட்டத்தின் கீழ் இந்திய தூதரகங்கள் மற்றும் தமிழக அரசின் இணையதளம் வாயிலாகப் பதிவு செய்துள்ள ஆயிரக்கணக்கான தமிழர்கள் தமிழகத்திற்கு விமான சேவை இல்லாததன் காரணமாக தவித்து வருகின்றனர்.

வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் தமிழர்களை  வந்தே பாரத்  திட்டத்தில்  தமிழகம் அழைத்து வர, மத்திய-மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரியும், அங்கு உணவு, மருத்துவம் இல்லாமல் தவித்துவரும் தமிழர்களுக்கு தேவையான உதவிகளை செய்துதர உத்தரவிட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுப்பையா மற்றும் பொங்கியப்பன் அமர்வு, வழக்கு விசாரணையை ஜூன் 12-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்