நெல் கொள்முதல் நிலையங்களில் வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகள் மழையால் நாசமாவது தொடர்பாக, தானாக முன் வந்து பொது நல வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ள சென்னை உயர்நீதிமன்றம், சேதத்தைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து மத்திய மாநில அரசுகள் பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள நெல் மூட்டைகள் அண்மையில் மழையில் நனைந்து நாசமாயின. மதுராந்தகம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்களில், விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெல்லை விற்பனைக்காகக் கொண்டுவந்து வைத்திருந்த நிலையில், திடீரென பெய்த மழையின் காரணமாக சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமாகி உள்ளன. குறிப்பாக அரசு கொள்முதல் செய்த மற்றும் விற்பனைக்காகக் கொண்டுவரப்பட்ட நெல் மூட்டைகள் உரிய பாதுகாப்பு இல்லாமல் வெட்டவெளியில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்ததால், மழையில் முழுவதுமாக நனைந்து சேதமடைந்தன.
இதுகுறித்து செய்தி வெளிவர, தானாக முன்வந்து சென்னை உயர்நீதிமன்றம் பொது நல வழக்காக விசாரணைக்கு எடுத்துள்ளது. இந்த வழக்கு, நீதிபதிகள் சத்யநாராயணன் மற்றும் அனிதா சுமந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்குக் கொண்டுவரப்படும் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாவதைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர். இந்த வழக்கை, விவசாயப் பொருட்களை அரசு நேரடி கொள்முதல் செய்ய வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கோடு சேர்த்து விசாரிப்பதாகவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.