தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதில் பதிவாகும் வாக்குகள் மே 2ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி பிரகாஷ் இன்று (24.03.2021) செய்தியாளரைச் சந்தித்தார். அப்போது அவர், “சென்னை மாவட்டத்தில் மட்டும் இதுவரை 7,300 பேர் தபால் வாக்குக்கு விண்ணப்பித்துள்ளனர். சென்னையில் 1.20 லட்சம் பேருக்கு தபால் வாக்குக்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுள்ளன. 12,000 பேர் தபால் வாக்கு விண்ணப்பத்தை சமர்ப்பித்துள்ளனர். நாளை முதல் வரும் 31ஆம் தேதி வரை தபால் வாக்கு சேகரிக்கும் பணி நடைபெறும்.
80 வயதுக்கு மேற்பட்டவர்கள், கரோனா நோயாளிகள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோரின் வீடுகளுக்கு நேரடியாக சென்று தபால் வாக்குகள் பெறப்படும். 80 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத் திறனாளிகள், கரோனா பாதித்தவர்கள் ஆகியோரது தபால் வாக்குகளைப் பெற 70 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தபால் வாக்குகளைப் பெற அதிகாரிகள் இரண்டு முறை வருவார்கள். அப்படி இரண்டு முறையும் தவறவிட்டாலும், நேரடியாக வாக்கு சாவடிக்குச் சென்று வாக்களிக்கலாம்” என அவர் தெரிவித்தார்.