சிதம்பரம் நடராஜர் கோயிலில் கடந்த சனிக்கிழமை அன்று மகன் பிறந்த நாளையொட்டி வழிபடச் சென்ற கிராம சுகாதார செவிலியர் லதா(51) அங்கிருந்த தீட்சிதர் ஆபாச வார்த்தைகள் கூறி செவிலியரை கன்னத்தில் அடித்து கீழே தள்ளினார்.
இந்தநிகழ்வு சமூக வலைத்தளத்தில் வைரலாகியது. இதனை அறிந்த பொதுமக்கள் தீட்சிதர்களுக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இதனைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட தீட்சிதர் தர்ஷன் என்கிற நடராஜா மீது சிதம்பரம் காவல்நிலையத்தில் பெண் வன்கொடுமை உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனையறிந்த தீட்சிதர் தலைமறைவாகியுள்ளார்.
இந்தநிலையில் பாதிக்கப்பட்ட செவிலியர் வீட்டிற்கு மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி வருகை தந்து பாதிக்கப்பட்ட செவிலியர் லதாவிற்கு ஆறுதல் கூறினார். மேலும் இந்த சம்பவம் குறித்து கேட்டறிந்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் சிதம்பரம் கோயிலுக்கு சாமி கும்பிட சென்ற பெண்ணை தீட்சிதர் தாக்கியது மிகவும் கண்டனத்திற்குரியது, கோவிலில் சட்டத்திற்கு விரோதமாக பல்வேறு நடவடிக்கைகளை செய்து தீட்சிதர்கள் சமூக விரோதிகள் போல் செயல்படுகிறார்கள். இவர்களை பாதுகாக்கும் விதமாக காவல்துறை இன்னும் கைது செய்யவில்லை. சட்டம் சாதி பார்த்து செயல்படுகிறதா? என்ற கேள்வி எழுகிறது என்றார்.
பிராமணர்கள் அல்லாத மற்றவர்கள் யாராவது இதுபோன்ற தவறு செய்து இருந்தால் அவர்களை அழைத்து வந்து உடனே கை கால் முறிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபடும் காவல்துறையினர் ஏன் இவர்களை பாதுகாக்கிறார்கள் என கூறிய அவர் தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என குற்றம் சாட்டினார்.
விரைவில் சரியான நடவடிக்கை இல்லை என்றால் தமிழகத்தில் உள்ள அனைத்து முற்போக்கு இயக்கங்களையும் ஒருங்கிணைத்து சிதம்பரத்தில் தீட்சிதர்களின் நடவடிக்கைகளை கண்டித்து போராட்டம் நடைபெறும் என அறிவித்தார்.
நடராஜர் கோயில் இங்குள்ள ஏழை, எளிய விவசாய மக்கள் கட்டிய கட்டிடம். சூழ்ச்சியின் பெயரால் தீட்சிதர்கள் கைப்பற்றி கோவிலில் தமிழுக்கு தடை,. பொதுமக்களிடம் தீண்டாமையுடன் நடப்பது, தமிழுக்கு விரோதமாகவும் பெண்களை கோவிலில் தாக்கும் ரவுடிகள், குண்டர்கள் போலவும் செயல்படுகிறார்கள். எனவே நடராஜர் கோயிலை தமிழக அரசின் இந்து அறநிலையத்துறை கையில் எடுத்து நிர்வாகிக்க வேண்டும். கோவிலில் பல்வேறு சமூக விரோத செயல்களில் ஈடுபடும் தீட்சிதர்களை கோவிலில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார். இதனைதொடர்ந்து சிதம்பரம் காவல் நிலையத்திற்கு வந்து செவிலியரை தாக்கிய தீட்சிதரை ஏன் இன்னும் கைது செய்யவில்லை என காவல்துறையினரிடம் கேட்டனர் விரைவில் கைது செய்வதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
அதேபோல் அனைத்து சுகாதரசெவிலியர் சங்க மாநில செயலாளர் மணிமேகலை மற்றும் சங்கத்தை சார்ந்த நிர்வாகிகள் சம்பந்தபட்ட செவிலியர் வீட்டிற்கு வந்து அவருக்கு ஆறுதல் கூறி செவிலியரை தாக்கிய தீட்சிதரை கைது செய்யாதது வன்மைக கண்டிக்கதக்கது என்றார்கள். மேலும் விரைவில் இந்த சம்பவத்தை கண்டித்து சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் செய்யவுள்ளதாக கூறியுள்ளனார்.