Skip to main content

கட்சி அலுவலகத்தில் உடல் அடக்கம் செய்ய அனுமதி வழங்கவில்லை; மாநகராட்சி விளக்கம்

Published on 06/07/2024 | Edited on 06/07/2024
chennai Corporation said that Armstrong  was not allowed to be buried in the party office

தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று(5.7.2024) இரவு பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் அருகே 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு  தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

இதனிடையே, இந்தக் கொலை வழக்கில், நேற்று இரவே(5.7.2024), பாலா, ராமு, திருமலை, செல்வராஜ், அருள் உள்ளிட்ட 8 பேர் தாங்கள்தான் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்தோம் என்று காவல் நிலையத்தில் சரண் அடைந்தனர். இதில் கடந்த ஆண்டு வெட்டி கொல்லப்பட்ட ஆற்காடு சுரேஷின் சகோதரர் பாலா என்பவர் தனது அண்ணன் கொலைக்கு பழிக்கு பழி வாங்கவே, கூட்டாளிகளை சேர்த்துக்கொண்டு ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததாக  பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார். தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நடைபெற்ற நிலையில்,  அவரது உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்படவுள்ளது. இதனைத் தொடர்ந்து ஆம்ஸ்ட்ராங்கின் உடல் அயனாவரத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டுச் சென்று அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட உள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி தலைவரும் உத்தர பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான மாயாவதி நாளை சென்னை வந்து ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்தவுள்ளார். 

இதையடுத்து ஆம்ஸ்ட்ராங் உடல் பெரம்பூரில் உள்ள பகுஜன் சமாஜ் கட்சியின் அலுவலகத்தில் அடக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதற்கு அனுமதி கோரி மாநகராட்சியிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து உடலை கட்சி அலுவலகத்தில் அடைக்கம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், தற்போது அதனை மாநகராட்சி அதிகாரிகள் மறுத்துள்ளனர்.

இதுவரை ஆம்ஸ்ட்ராங் உடல் அடக்கம் செய்ய அனுமதி வழங்கப்படவில்லை என்று தெரிவித்த அதிகாரிகள், குடியிருப்பு பகுதியில் உடலை அடக்கம் செய்ய பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளதாக தெரிவித்திருக்கின்றனர். ஆனால் அவரது உடலை கட்சி அலுவலகத்தில்தான் அடக்கம் செய்ய வேண்டும் எனறு பகுஜன் சமாஜ் கட்சியினர் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்னும் ஆம்ஸ்ட்ராங் உடல் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அந்த பகுதியை சுற்றி கட்சி நிர்வாகிகள் குவிந்துள்ளனர். 

சார்ந்த செய்திகள்

 

Next Story

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு; 11 பேருக்கு போலீஸ் காவல்!

Published on 11/07/2024 | Edited on 11/07/2024
BSP Armstrong incident Police custody for 11 people

தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5 ஆம் தேதி (05.07.2024) இரவு பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் அருகே 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவரது ஆம்ஸ்ட்ராங்கின் உடல் பெரம்பூர் பந்தர் கார்டன் மாநகராட்சி பள்ளியில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் அடக்கம் செய்யப்பட்டது. இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக அரசியல் கட்சியினர் பலரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். அதோடு தமிழகத்தின் சட்ட ஒழுங்கு குறித்து கேள்விகளையும் எதிர்க்கட்சியினர் எழுப்பி வருகின்றனர்.

இதற்கிடையே உணவு டெலிவரி செய்யும் ஊழியர்களைப் போல் உடை அணிந்து கொண்டு வந்த மர்ம நபர்கள் ஆம்ஸ்ட்ராங்கை வெட்டியதாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியானது. இத்தகைய சூழலில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 8 பேர் காவல்நிலையத்தில் சரண் அடைந்தனர். சரண் அடைந்த ஆற்காடு சுரேஷின் சகோதரர் பொன்னை பாலு, ராமு, திருமலை, செல்வராஜ், அருள் உள்ளிட்ட 8 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னையில் கடந்த ஆண்டு ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிக்குப் பழியாக இந்த கொலை நடந்திருக்கலாம் எனத் தகவல் வெளியானது. கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் பட்டினப்பாக்கம் பகுதியில் ஆற்காடு சுரேஷ் வெட்டிக் கொலை செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதோடு இந்த கொலை வழக்கு தொடர்பாக மேலும் மூவர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் 11 பேரும் பூந்தமல்லி சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். 

BSP Armstrong incident Police custody for 11 people

இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 11 பேருக்கு 5 நாட்கள் போலீஸ் காவல் வழங்கி எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காவல்துறை சார்பில் 7 நாட்கள் நீதிமன்ற காவல் கேட்ட நிலையில் பொன்னை பாலு, ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், அருள், கோகுல், விஜய் மற்றும் சிவசக்தி உள்ளிட்ட 11 பேருக்கு 5 நாட்கள் போலீஸ் காவலை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  

Next Story

ஆம்ஸ்ட்ராங் கொலை; ‘சிபிஐ விசாரிக்க வேண்டும்’ - எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

Published on 09/07/2024 | Edited on 09/07/2024
CBI should investigate Edappadi Palaniswami insists

தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 05.07.2024 அன்று இரவு பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் அருகே 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டது தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து ஆம்ஸ்ட்ராங்கின் உடல் பெரம்பூர் பந்தர் கார்டன் மாநகராட்சி பள்ளியில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் அடக்கம் செய்யப்பட்டது. இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக பலரும் கருத்துக்கள் மற்றும் கண்டங்கள் தெரிவித்து வருகின்றனர். அதோடு தமிழகத்தின் சட்ட ஒழுங்கு குறித்து கேள்விகளையும் எதிர்க்கட்சிகள் எழுப்பி வருகின்றனர்.

இத்தகைய சூழலில் பெரம்பூர் அயனாவரம் பகுதியில் அமைந்துள்ள ஆம்ஸ்ட்ராங் இல்லத்திற்கு வீட்டிற்கு சென்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி மற்றும் குடும்பத்தாரிடம் ஆறுதல் தெரிவித்ததோடு ஆம்ஸ்ட்ராங்கின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதனையடுத்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினரை நேரில் சந்தித்து அன்புமணி ஆறுதல் கூறினார். மேலும் அவரது வீட்டில் இருந்த ஆம்ஸ்ட்ராங் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். 

CBI should investigate Edappadi Palaniswami insists

இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை அயனாவரத்தில் உள்ள ஆம்ஸ்ட்ராங்கின் இல்லத்திற்கு சென்று அவரது உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார். மேலும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “நண்பர் ஆம்ஸ்ட்ராங்கின் மறைவு செய்தி கேட்ட அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை. இந்த கொலை சம்பவம் தமிழ்நாட்டின் சமூக நீதிக்கு மிகப்பெரிய பின்னடைவு ஆகும். பட்டியலின, பிற்படுத்தப்பட்ட மக்கள் அனைவரும் ஒன்று சேர வேண்டும். அவ்வாறு ஒன்று சேர்ந்து தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க வேண்டும் என கடந்த 20 ஆண்டுகளாக சொல்லி வந்தவர் ஆம்ஸ்ட்ராங்.

ஆம்ஸ்ட்ராங்கின் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும். ஆம்ஸ்ட்ராங் கொலையில் உண்மை குற்றவாளிகளை கண்டறிய வேண்டுமென்றால், சிபிஐ விசாரணை தேவை; ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டால்தான் நேர்மையாக விசாரணை நடக்கும். தமிழ்நாட்டில் பெரிய தலைவரின் உயிருக்கே பாதுகாப்பு இல்லை. பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். தமிழ்நாட்டில் உள்ள கூலிப்படை கலாச்சாரத்தை வேரோடு அறுக்க வேண்டும். சேலத்தில் அதிமுக நிர்வாகி, கடலூரில் பாமக நிர்வாகி, எனத் தொடர்ந்து பல பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். 

CBI should investigate Edappadi Palaniswami insists

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தற்போது கைது செய்யப்பட்டவர்கள், உண்மையான குற்றவாளிகள் இல்லையென ஆம்ஸ்ட்ராங்கின் குடும்பத்தாரும், கட்சி நிர்வாகிகளும் சந்தேகிக்கின்றனர். எனவே உண்மையான குற்றவாளிகளை தமிழ்நாடு அரசு கண்டறிய வேண்டும். ஆம்ஸ்ட்ராங் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்புடையவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும். ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பான சிசிடிவி காட்சியை பார்க்கும்போது அரசு எடுத்த நடவடிக்கை முரணாக உள்ளது” எனத் தெரிவித்தார்.