கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் மே மாதம் 3 -ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். இருந்தபோதிலும் இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக மஹாராஷ்டிரா, டெல்லி, தமிழகம், ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் கரோனாவால் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,683 ஆக அதிகரித்துள்ளது. இதில் 752 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 20 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் சென்னையில் எந்தப் பகுதியில் எத்தனை பேருக்கு கரோனா என்பதை மண்டலம் வாரியாகச் சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
அதன்படி, சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 118 பேருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் திரு.வி.க. நகர்- 49, கோடம்பாக்கம்- 36, அண்ணா நகர்- 35, தண்டையார்பேட்டை- 56, தேனாம்பேட்டை- 45, பெருங்குடி- 8, அடையாறு- 10, திருவொற்றியூர்- 13, வளசரவாக்கம்- 13, ஆலந்தூர்- 9, சோழிங்கநல்லூர்- 2, மாதவரம்- 3, மணலி-1, அம்பத்தூர்- 1, மற்ற மாவட்டங்களுக்கு மாற்றி அறிவிக்கப்பட்ட நோயாளிகள் 1 என மொத்தம் 400 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்றைய தினம் மட்டும் தண்டையார்பேட்டை 10, ராயபுரத்தில் 1, திரு.வி.க.நகரில் 4, அண்ணா நகரில் 3, தேனாம்பேட்டையில் 1, வளசரவாக்கத்தில் 3, ஆலந்தூரில் 2, அடையாற்றில் 3 பேர் என 27 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறு சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.