சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள நடிகர் ரஜினிக்குச் சொந்தமான ராகவேந்திரா திருமண மண்டபத்திற்கு, கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான அரையாண்டு காலத்துக்கு 6 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் சொத்து வரி செலுத்தும் படி, சென்னை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இந்த நோட்டீஸை எதிர்த்தும், சொத்து வரியைக் குறைக்கக்கோரியும் நடிகர் ரஜினிகாந்த், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு உயர்நீதிமன்ற நீதிபதி அனிதா சுமந்த் முன்பு நேற்று (14/10/2020) விசாரணைக்கு வந்த போது மாநகராட்சியிடம் மனு கொடுத்த ஒரு வாரத்தில் எப்படி வழக்கு தொடரமுடியும்? நோட்டீஸ் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அவகாசம் வேண்டாமா? நடவடிக்கை எடுக்காவிட்டால், நினைவூட்டல் கடிதம் அனுப்ப வேண்டும் என்ற நடைமுறையைப் பின்பற்றவில்லையா? நீதிமன்றம் என்ன மாநகராட்சி அலுவலகமா? எனக் கேள்விகள் எழுப்பியதோடு, இந்த வழக்கைக் கடுமையான அபராதம் விதித்து, தள்ளுபடி செய்யப்போவதாகவும் நீதிபதி எச்சரித்தார்.
அதன்பின்னர், இந்த வழக்கை வாபஸ் பெறுவதாக ரஜினி தரப்பில் பலமுறை கோரிக்கை வைத்ததை அடுத்து, அதற்கான மனுவைத் தாக்கல் செய்ய அறிவுறுத்தி, வழக்கின் மீதான உத்தரவை மாலை பிறப்பிப்பதற்காக ஒத்திவைத்திருந்தார். தற்பொழுது சொத்துவரி விவகாரத்தில் ரஜினி தாக்கல் செய்த மனுவை ஏற்றுக்கொண்டு வழக்கை தற்போது உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், "ராகவேந்திரா மண்டப சொத்து வரி... நாம் மாநகராட்சியில் மேல்முறையீடு செய்திருக்க வேண்டும். தவறைத் தவிர்த்திருக்கலாம். அனுபவமே பாடம்" எனத் தெரிவித்துள்ளார்.