தடையை மீறி சிஏஏவுக்கு எதிராக சட்டமன்றத்தை முற்றுகையிட பேரணி தொடங்கியது.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இஸ்லாமிய அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை வண்ணாரப்பேட்டையில் 6- நாளாக போராட்டம் தொடர்ந்து வரும் நிலையில், சட்டமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என இஸ்லாமிய கூட்டமைப்பினர் அறிவித்திருந்தனர்.
அதன் தொடர்ச்சியாக சென்னை சேப்பாக்கம் கலைவாணர் அரங்கில் இருந்து சட்டமன்றத்தை முற்றுகையிடும் பேரணி தொடங்கியது. இதில் இஸ்லாமிய இயக்கங்கள், அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு சார்பில் ஏராளமானோர் பேரணியில் பங்கேற்றுள்ளனர். அடையாள அட்டை, தேசிய கொடியுடன் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக இஸ்லாமியர்கள் முழக்கமிட்டனர்.
சட்டமன்றத்தை முற்றுகையிட மார்ச் 11- ஆம் தேதி வரை சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
பேரணி நடைபெறுவதையொட்டி சென்னை சட்டமன்ற பகுதியில் 2000 போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் மூன்று தற்காலிக கட்டுப்பாட்டு அறை மற்றும் கேமராக்களின் உதவியுடன் போராட்டம் கண்காணிக்கப்பட உள்ளது. தடையை மீறி பேரணியில் ஈடுபட்டால் தடுத்து நிறுத்துவோம்; மீறினால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
இதனிடையே குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தேனி, நெல்லை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் ஆட்சியர் அலுவலகங்களை முற்றுகையிட பேரணி நடந்து வருகிறது.