தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்கம் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் இன்று நடைபெற்றது. சந்திப்பில் அச்சங்கத்தின் தலைவர் யுவராஜ் தமிழக அரசிடம் சில கேள்விகளை முன்னெடுத்துள்ளார்.
அவர் கூறியதாவது " நீதிமன்றம் வழிகாட்டுதலின் பேரில் அரசாங்கம் கடந்த 2003ஆம் ஆண்டு முதல் தமிழக அரசே மணலை வழங்கி வந்தது. கடந்த 3 ஆண்டுகளாக மணல் வழங்குவதை நிறுத்திவிட்டு எம் சாண்ட் எனப்படும் மணலை உபயோக படுத்திக்கொண்டிருக்கிறோம். இந்த மணலை தற்போது அரசு அதிக விலைக்கு விற்று வருகிறது. ஆற்று மணலை அரசு மூன்று மண்டலமாக வழங்குவதை முற்றிலுமாக நிறுத்திவிட்ட பின்பும் மலேசிய மணலை வழங்க ஐஏஎஸ் அதிகாரிகள் தேவை தானா?. ஆன்லைன் மூலம் வழங்கி வந்த அரசு கடந்த 3 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் அனுமதியின்றி பல கிரஷர்கள் தரமற்ற எம் சாண்டை வழங்கி வருகிறது. இதனால் மவுலிவாக்கம் போன்ற பேராபத்து ஏற்பட வாய்ப்புள்ளது" என்றார்.
மேலும் அவர் " தமிழகத்தில் இருந்து 6500 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மலேசிய சாண்டை தமிழக அரசு ஒரு டன்னிற்கு 2300 ரூபாய்க்கு விற்கிறது. அண்டை மாநிலங்களான கர்நாடகா மற்றும் ஆந்திர பிரதேசம் முறையே 1650 மற்றும் 1500 ரூபாய்களுக்கு விற்கின்றன. இறக்குமதி உரிமத்தை அரசுக்கு வேண்டியவருக்கு வழங்குவதை தவிர்த்து வெளிப்படை தன்மையில் வழங்கினால் விலை குறையும் மற்றும் பாதியில் நிற்கும் கட்டிடங்களை முடிக்கவும் முடியும். அண்டை மாநிலங்கள் குறைவாக விற்கும் போது தமிழகத்தில் அதிக விலைக்கு விற்பது ஏன் ? மேலும் எந்த ஒரு பொருளும் அரசு குறைவாகவே விற்கும் ஆனால் இங்கு தலைகீழாக உள்ளது. மலேசிய மண் மீது அரசு ஏன் இவ்வளவு அக்கறை கொள்கிறது" என்று கேள்வி எழுப்பினார்.
இச்சந்திப்பில் சங்க நிர்வாகிகள் அருகில் இருந்தனர்.