தமிழகத்தில் சென்னை,காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர்மழை காரணமாக நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன.
செங்கல்பட்டு மாவட்டம் அருகே உள்ள மதுராந்தகம் ஏரியில் உபரிநீர் திறக்க வாய்ப்புள்ளதால், கரையோரம் வசிப்போர் பாதுகாப்பாக இருக்க பொதுமக்களுக்கு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
அதன்படி மதுராந்தகம் ஏரியை ஒட்டியுள்ள கிராமங்களான முன்னுத்திக்குப்பம், முருக்கஞ்சேரி, கட்டுச்சேரி, விழுதமங்கலம் உட்பட 9 கிராம மக்களுக்கு அறிவுறுத்தல். மேலும் மதுராந்தகம் ஏரியை பொதுப்பணித்துறையினர் மற்றும் போலீசார் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மழையால் ஏரி முழு கொள்ளளவை எட்ட உள்ளதால் ஏரியை பொதுமக்கள் பார்வையிடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மதுராந்தகம் ஏரியின் முழு கொள்ளளவான 23.3 அடியில் 22.3 அடிக்கு தண்ணீர் நிரம்பியுள்ளது. மேலும் ஏரிக்கு நீர்வரத்து 1000 கனஅடியாக உள்ள நிலையில் நீர்இருப்பு 655 மில்லியன் கனஅடியாக இருக்கிறது.