மதுரை மாட்டுத்தாவணி உட்பட பல இடங்களில் ரசாயனம் கலந்த மீன்கள் விற்பனை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையில் மட்டும் நேற்றுமுதல் (13.07.2021) தற்போது வரை 600 கிலோ காலாவதியான மற்றும் ஃபார்மலின் எனும் வேதிப்பொருள் கலக்கப்பட்ட மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ரசாயனம் கலந்த மீன் விற்கப்படுவது மதுரையில் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட கரிமேடு பகுதியில் அமைந்திருக்கும் மீன் சந்தையில் மீன்கள் மொத்தமாகவும், சில்லறையாகவும் விற்கப்படுகிறது. லாரிகள் மூலமாக மீன்கள் அந்த மார்க்கெட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டு விற்கப்படும் நிலையில், கரிமேடு மீன் சந்தையில் கெட்டுப்போன மீன்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்படுவதாக மாநகராட்சி ஆணையாளர் மற்றும் அதிகாரிகளுக்குப் புகார்கள் வந்தன. இந்தநிலையில் இதுதொடர்பாக மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன நல அலுவலர் ஜெயராமன் பாண்டியன் தலைமையிலான குழுவினர் அங்கு சென்று அதிரடியாக சோதனை நடத்தினர்.
இப்படி திடீரென நடத்தப்பட்ட ஆய்வில் 10க்கும் மேற்பட்ட கடைகளில் பெட்டிகளில் அடைத்துவைக்கப்பட்டிருந்த 500 கிலோ மீன்கள் ரசாயனம் கலந்த மீன்களாகவும், கெட்டுப்போன மீன்களாகவும் இருந்தது தெரியவந்து, பறிமுதல் செய்யப்பட்டன. இதனைத்தொடர்ந்து மதுரையின் பல்வேறு இடங்களிலும் ஆய்வு செய்யப்பட்டது. அதையொட்டி மதுரை மாட்டுத்தாவணி சந்தையிலும் நள்ளிரவில் அதிரடி ரெய்டில் ஈடுபட்டனர்.
\
மாட்டுத்தாவணி சந்தையில் மட்டும் இதுவரை 70 கிலோ ரசாயன மீன்கள் சிக்கியுள்ளன. இப்படி மதுரையின் முக்கிய மீன் விற்பனை நிலையங்களில் கெட்டுப்போன மீன்கள் விற்கப்படுவது மற்றும் ரசாயன மீன்கள் விற்கப்படுவது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட இந்த மீன்கள் குப்பை தொட்டியில் கொட்டப்பட்டு அழிக்கப்பட்டது.