சேலம் மத்திய சிறையில் தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் என 800க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர். சிறைக்குள் புகையிலைப் பொருள்கள், அலைப்பேசி, கஞ்சா உள்ளிட்டவை தடை செய்யப்பட்டுள்ளன. சிறைக் காவலர்கள் அவ்வப்போது திடீர் சோதனை நடத்தி, தடை செய்யப்பட்ட பொருள்களைப் பறிமுதல் செய்வதும் தொடர்கிறது.
இந்நிலையில், சிறைத்துறை டிஐஜி சண்முக சுந்தரம் ஜூன் 4 ஆம் தேதி அதிகாலை, சேலம் மத்திய சிறையில் திடீர் ஆய்வு நடத்தினார். அவர் முன்னிலையில், சிறைக் காவலர்கள், கைதிகளுக்காக காலை உணவு கொண்டு வந்த சமையலர்களை சந்தேகத்தின் பேரில் சோதனை நடத்தினர். சமையலர் தனபால் (39) என்பவரை சோதனை செய்தபோது, அவருடைய உள்ளாடைக்குள் 140 கிராம் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. அதை சிறைக் காவலர்கள் பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து உடனடியாக தனபாலை சிறைக் காவலர்கள் பிடித்துச் சென்று அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். காவல்துறையினர் அவரை கைது செய்தனர். இதுவரை சமையலர் தனபால், எந்தெந்த கைதிக்கு என்னென்ன தடை செய்யப்பட்ட பொருள்களை கடத்திச் சென்றுள்ளார்? அவரிடம் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களைக் கொடுத்து அனுப்புவது யார்? இதில், சிறைத்துறையில் யாருக்கேனும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. இதற்கிடையே, சமையலர் தனபாலை பணியிடை நீக்கம் செய்து சேலம் மத்திய சிறை எஸ்பி மதிவாணன் (பொறுப்பு) உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவம் சிறைத்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.