சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 3ஆம் தேதி (03.08.2024) முதல் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக ஆகஸ்ட் 14 ஆம் தேதி வரை (14.08.2024) சென்னை புறநகர் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டன். இதனால் காலை 10.30 மணி முதல் பிற்பகல் 02.30 மணி வரையும், இரவு 10.00 மணி முதல் 11.59 வரை சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு செல்லும் ரயில்கள் பல்லாவரம் ரயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும். செங்கல்பட்டிலிருந்து சென்னை கடற்கரை செல்லும் ரயில்கள் கூடுவாஞ்சேரி ரயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது.
இந்நிலையில் சென்னை புறநகர் ரயில் சேவை மாற்றத்தை மேலும் 4 நாட்களுக்கு நீட்டித்து தெற்கு ரயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே அறிவித்திருந்த ரயில் சேவை மாற்றம் நாளை மறுநாளுடன் (14.08.2024) முடிவடைய உள்ள நிலையில் ஆகஸ்ட் 18 ஆம் தேதி (18.08.2024) வரை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது. தாம்பரம் ரயில் நிலையத்தில் கூடுதல் தண்டவாளம் அமைக்கும் பணிகள் முடிவடையாததால் ரயில் சேவை மாற்றம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பின் படி 55 புறநகர் ரயில்கள் ஆகஸ்ட் 18ஆம் தேதியுடன் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதோடு புதுச்சேரி - சென்னை எழும்பூர், எழும்பூர் - புதுச்சேரி, சென்னை கடற்கரை - மேல்மருவத்தூர் ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் விழுப்புரம் - தாம்பரம், விழுப்புரம் - மேல்மருவத்தூர், மேல்மருவத்தூர் - சென்னை கடற்கரை ரயில்களும் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன.