Skip to main content

“ரஷ்யா நம்மிடம் தோல்வி அடைந்திருக்கிறது” - திட்ட இயக்குநரின் தந்தை பெருமிதம்

Published on 24/08/2023 | Edited on 24/08/2023

 

Chandrayaan 3 Project Director's father proudly says Russia has failed us

 

இந்தியா சார்பில் நிலவின் தென் பகுதியை ஆராயக் கடந்த ஜூலை 14 ஆம் தேதி விண்ணில் பாய்ந்த சந்திரயான் - 3, நிலவின் ஈர்ப்பு விசைக்குள் செலுத்தப்பட்டு, பின்பு நிலவுக்கு மிக அருகில் சென்று தென் துருவத்தில் வெற்றிகரமாக இறங்கி வரலாற்று சாதனை படைத்துள்ளது. நேற்று மாலை லேண்டர் நிலவின் தென் பகுதியில் இறங்கிய நிலையில், நேற்று இரவு 9 மணியிலிருந்து லேண்டரில் இருந்து ரோவர் வெளியே வந்து ஆய்வுக்கான தனது பயணத்தை தொடங்கியுள்ளது.

 

இஸ்ரோவின் இந்த வரலாற்றுச் சாதனையை அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் என அனைத்து தரப்பு மக்களும் கொண்டாடி வருகின்றனர். அதே போல், சந்திரயான் 3 விண்கல திட்டத்தின் மூளையாகத் திகழ்ந்த விழுப்புரத்தைச் சேர்ந்த திட்ட இயக்குநர் வீரமுத்துவேல் குடும்பத்தினர், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

 

அதன் பின்னர், திட்ட இயக்குநர் வீரமுத்துவேலின் தந்தை பழனிவேலு நேற்று விழுப்புரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “சந்திரயான் 3 விண்கலத்தின் வெற்றி தமிழக மக்களுக்கு மட்டுமன்றி ஒட்டுமொத்த இந்திய மக்களுக்கான வெற்றி தான். இந்த நாளை அவ்வளவு எளிதாக யாரும் மறக்க முடியாது. எனது மகன் இந்த திட்டத்தை ஏற்றுக்கொண்டதில் இருந்து சந்திரயான் 3 விண்கலம் வெற்றி பெற வேண்டும் என்று பல மாத காலங்களாக முயற்சி எடுத்துள்ளார். அவர் எடுத்த முயற்சி வீண் போகவில்லை. அவரது பெயருக்கு ஏற்றார் போல் வீரனாக வெற்றி பெற்றிருக்கிறார். இந்தியா ஒரு வீர நாடு என்ற பெயரை நிலை நிறுத்தியுள்ளார்.

 

இன்று இந்திய மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். இந்தியா பெருமைக்குரிய நாடாக,  சிறந்த நாடாக திகழ்ந்து உலகறியச் செய்திருக்கிறது. குறிப்பாக, நிலவு ஆய்வு பயணத்தில் இந்தியாவுக்கு போட்டியாக விண்கலத்தை விட்ட ரஷ்யா இன்று நம்மிடம் தோல்வியடைந்திருக்கிறது. இதன் மூலம், இந்தியா மிகப்பெரிய வல்லரசு நாடாகத் திகழக்கூடிய அளவிற்கு பெருமைப்படக்கூடிய நாடாக வந்திருக்கின்றது. அனைத்து நாடுகளும் வாழ்த்துகின்றன. நம்முடைய நாட்டின் பிரதமர் மோடி மகிழ்ச்சியாக இருக்கிறார்.

 

சந்திரயான் 3 விண்கலத்தின் திட்டத்தில் பொறுப்பேற்றதிலிருந்து வீரமுத்துவேல், குடும்பத்தில் உள்ள யாரிடமும் பேசுவது கிடையாது. எனது மகளின் திருமணம் 21 ஆம் தேதி நடைபெற்றது. 23 ஆம் தேதி விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கும் நாள். அதனால், வீரமுத்துவேல் எங்கள் வீட்டில் நடைபெற்ற திருமணத்திற்கு கூட வரவில்லை. மற்ற குடும்ப நிகழ்ச்சிக்கும் வந்தது கிடையாது. நானும் அவரது வேலை தான் முக்கியம் என்று அதில் கவனம் செலுத்துமாறு கூறினேன். திருமணத்திற்கு அவர் வருவதை விட இன்று அதிகளவு சந்தோஷம் கிடைத்துள்ளது” என்று கூறினார். 

 

 

சார்ந்த செய்திகள்