தென்காசியில் பழமையான இந்து கோயில் அரசின் உதவியுடன் இடிக்கப்பட்டு மசூதியாக மாற்றப்பட்டு உள்ளதாக காணொளி ஒன்று எக்ஸ் சமூக வலைதளங்களில் பரப்பப்படுகிறது. இச்செய்தி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் அந்த காணொளியை குறிப்பிட்டு தமிழ்நாடு உண்மை கண்டறியும் குழு விளக்கம் அளித்துள்ளது. அதில், “இது கோயில் அல்ல, தர்கா. தென்காசி அருகே பொட்டல்புதூரில் இஸ்லாமிய அறிஞர் முகைதீன் அப்துல் காதர் ஜெய்லானியின் நினைவாக கடந்த 1674 ஆம் ஆண்டு "முகைதீன் ஆண்டவர் தர்கா" கட்டப்பட்டது.
இஸ்லாமியர்கள் மட்டுமின்றி இந்துக்களும், கிறிஸ்தவர்களும் இங்கு வந்து பிரார்த்தனை செய்கிறார்கள். திராவிடக் கட்டிடக் கலை அடிப்படையில் இந்த தர்கா கட்டப்பட்டுள்ளது. ஆனால் கோயிலை மசூதியாக மாற்றிவிட்டதாக வதந்தி பரப்பி வருகிறார்கள். வதந்திகளைப் பரப்புவது சட்டப்படி குற்றமாகும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.