Published on 01/12/2020 | Edited on 01/12/2020

வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் கன்னியாகுமரிக்கு கிழக்கு தென்கிழக்கே 900 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. இது மணிக்கு 11 கி.மீ வேகத்தில் மேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது.
வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், நாளை காலை 'புரெவி' புயலாக வலுப்பெற உள்ளது. நாளை மாலை இலங்கையின் திரிகோணமலைப் பகுதியைப் புயல் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து டிச.4 -ஆம் தேதி அதிகாலை கன்னியாகுமரி - பாம்பன் இடையே புயல் கரையைக் கடக்கக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தென் மாவட்டத்தைச் சேர்ந்த கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிகளைச் சேர்ந்த மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடத்தில் தங்க வைப்பதற்கான ஏற்பாடுகளை அந்தந்த மாவட்ட நிர்வாகம் செய்துவருகிறது.