கரோனா பெருந்தொற்று காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் திருச்சியில் பல இடங்களில் சட்டவிரோதமாக கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெறுவது குறித்து நக்கீரன் இணையத்தில் நேற்று செய்தி வெளியாகியிருந்தது. இந்நிலையில் இது தொடர்பாக கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
லால்குடி அருகே உள்ள கீழஅன்பில் கிராமப் பகுதியில் வீட்டில் மதுபான பாட்டில்களை சட்டவிரோதமாக பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பதாக லால்குடி காவல்நிலைய ஆய்வாளர் செந்தில்குமாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
அதனடிப்படையில் அப்பகுதியில் நடைபெற்ற சோதனையில் கீழ அன்பில் பகுதியில் உள்ள பட்டி தெருவில் பழனிசாமி என்பவருடைய வீட்டில் மது பாட்டில்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டது கண்டறியப்பட்டது.
அதன்பின் சோதனை செய்தபோது அங்கே பதிக்க வைக்கப்பட்டிருந்த 1,087 பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட முரளி மற்றும் வரகனேரி பகுதியை சேர்ந்த கதிரேசன் உள்ளிட்ட 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
தற்போது பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்களின் மதிப்பு சுமார் 2 லட்சத்து 15 ஆயிரம் வரை இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.