சென்னையில் உள்ள தென்மண்டல வானிலை ஆய்வு மையம் இன்று (04/12/2021) வெளியிட்டுள்ள அறிவிப்பில், "கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, மதுரை, கோவை, நாமக்கல், சேலம் ஆகிய 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கன்னியாகுமரி, தென்காசி, நெல்லை, மதுரை, திருச்சி, கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி, திருவண்ணாமலை ஆகிய 13 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
வங்கக்கடலில் நிலவும் புயல் வலுவிழந்து, 12 மணி நேரத்தில் தீவிர காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறும். ஜாவத் புயல் இன்னும் 12 மணி நேரத்தில் வலுவிழக்கும். இரண்டு நாட்களுக்கு வடக்கு ஆந்திரா - ஒடிஷா கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். தமிழ்நாட்டில் அதிகபட்சமாக எடப்பாடி, மோகனூரில் தலா 9 செ.மீ., வெம்பக்கோட்டை, மேட்டூரில் தலா 8 செ.மீ. மழை பதிவானது." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.