மத்திய அரசின் ‘கெளஸால் விகாஸ் யோஜனா’ என்ற திட்டத்தின் கீழ் மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களுக்கு தொழில் மற்றும் திறன் பயிற்சி பட்டறைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தத் திட்டத்தை தேசிய திறன் மேம்பாடு கழகம் செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், தஞ்சை மாவட்டம் பாபநாசம் அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கு நேற்று திருச்சி தேசி தொழில்நுட்ப கல்லூரியில் பயிற்சி வகுப்பு துவங்கியது.
தேசிய தொழில்நுட்ப கழகத்தின் இயக்குநர் அகிலா, இந்தப் பயிற்சி வகுப்பை நேற்று துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், “கல்வியில் மிகவும் பின்தங்கி கல்வியை பாதியில் நிறுத்தி எந்தவித பணிக்கும் செல்ல முடியாமல் இருக்கும் மாணவர்களுக்கு இந்த புதிய திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கவும் குறுகிய கால படிப்புகள் மூலம் இடைநிறுத்தம் மற்றும் வேலையில்லாத இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்புகளை உருவாக்கி தரவும் இந்த திட்டமானது செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழக அரசும் திறன் சான்றிதழ் மூலம் இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சியை அளிப்பதில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது. இருப்பினும் தற்போது மாநிலம் சார்ந்த அரசு பாலிடெக்னிக் மாணவர்களுக்கு மத்திய அரசின் கல்வி நிறுவனத்தில் பயிற்சி அளிப்பது என்பது மிக பெருமைக்குரியதாக கருதுகிறோம். பொறியியல், அறிவியல், மேலாண்மை, தொழில்நுட்பம், தொழில் துறை, சுற்றுச்சூழல் மேம்பாடு என பல்வேறு நிலைகளில் மாணவர்களுக்கு திறன் பயிற்சி அளித்து தொழில் துறைக்கு தேவையான மனித வள பற்றாக்குறையை பூர்த்தி செய்ய இந்தப் பயிற்சி வகுப்புகள் உதவியாக அமையும்” என்றார்.
இந்தப் பயிற்சி முகாமில் தேசிய தொழில்நுட்ப கழகத்தின் திறன் பயிற்சி மையத் தலைவர் ஸ்ரீ ராம்குமார், ஒருங்கிணைப்பாளர் சிவக்குமரன், திட்டமிடல் மற்றும் மேம்பாட்டுத் துறை முதன்மையாளர் துரைசெல்வம் ஆகியோர் கலந்துரையாடினர். இந்த பயிற்சி வகுப்பில் சுமார் 30 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.