முன்னாள் முதல்வர் கலைஞரின் நூற்றாண்டு நிறைவு பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடுவது குறித்து திண்டுக்கல் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திண்டுக்கல்லில் உள்ள ரவுண்டு ரோடு நாயுடு மஹாலில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு திண்டுக்கல் கிழக்கு மாவட்ட அவைத்தலைவர் காமாட்சி, மேற்கு மாவட்ட அவைத்தலைவர் மோகன்தலைமை தாங்கினார்.
திண்டுக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், அமைச்சருமான சக்கரபாணி, பழனி சட்டமன்ற தொகுதி திமுக உறுப்பினரும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளருமான ஐ.பி.செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக திமுக துணைப் பொதுச் செயலாளரும், அமைச்சருமான ஐ.பெரியசாமி கலந்து கொண்டார்.
இக்கூட்டத்தில் ஐ.பி.செந்தில்குமார் பேசும் போது, “நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் வரலாறு காணாத அளவிற்கு வெற்றியை தேடித்தரும் அளவிற்கு அயராது உழைத்த திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். தமிழகத்தில் வேறு எந்த மாவட்டத்திலும் இல்லாத அளவிற்கு மாவட்டங்களை இரண்டாக பிரித்தாலும், கட்சி பணி மற்றும் தேர்தல் பணி உட்பட அனைத்து பணிகளிலும் ஒற்றுமையுடன் செயல்படும் திண்டுக்கல் மாவட்டம் திமுக நிர்வாகிகள் அனைவருக்கும் எனது அன்பான வேண்டுகோள் என்னவென்றால் வருகின்ற சூன் 3ம் தேதி கொண்டாடப்பட உள்ள முத்தமிழ் அறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை தமிழகமே திரும்பி பார்க்கும் அளவிற்கு எழுச்சிமிகு விழாவாக கொண்டாட வேண்டும்” என்றார்.
அதன்பின் கூட்டத்தில் அமைச்சர் சக்கரபாணி பேசும்போது, “வருகிற ஜீன் 4ம் தேதி வரை நமக்கு தேர்தல் விதிமுறைகள் இருந்தாலும், ஜீன் 3ம்தேதி நடைபெறும் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை கொண்டாடுவதற்கு உண்டான ஏற்பாடுகளை தமிழக முதல்வர் ஸ்டாலின் செய்து வருகிறார். அதற்கான உத்தரவு வந்தவுடன் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் உள்ள திமுகவினர் எழுச்சிமிகு விழாவாக கலைஞரின் நூற்றாண்டு விழாவை கொண்டாடவேண்டும். மத்தியில் இந்திய கூட்டணி தலைமையிலான ஆட்சி அமைந்தவுடன் தமிழகத்திற்கு எண்ணற்ற நலத்திட்டங்கள் கிடைக்கும். அதோடு வரலாறு காணாத அளவிற்கு நலத்திட்டபணிகள் நடைபெறும் என்று கூறினார்.
கூட்டத்தில் இறுதியாக பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி, “ஜீன் 3-ம் தேதி வருகின்ற முத்தமிழ் அறிஞரும் திராவிட இயக்கத்தின் ஆணிவேருமான டாக்டர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவை தமிழகமே திரும்பி பார்க்கும் அளவிற்கு எழுச்சிமிகு விழாவாக திமுகவினர் கொண்டாடவேண்டும். தலைமை கட்சியால்அறிவிக்கப்படும் போராட்டமாக இருந்தாலும் சரி, பிறந்தநாள் விழாவாக இருந்தாலும் சரி, அதை யார் சிறப்பாக செய்கிறார்களோ அவர்கள் தான்கட்சியில் நிலைத்திருக்க முடியும். வருங்காலத்தில் இளைஞர்கள் கட்சிப்பணி ஆற்றும் அளவிற்கு அவர்கள் பணிகளை மூத்த நிர்வாகிகள் ஒதுக்கிதர வேண்டும் என்றதோடு நாம் கடந்த காலத்தில் எப்படி கட்சிக்கு வந்தோம்.
இப்போது நாம கட்சியில் எந்த நிலையில் உள்ளோம். கட்சியால் நாம்அடைந்த உயர்நிலையை ஒவ்வொரு நிர்வாகிகளும் உணர்ந்தால் நமக்குள் எந்தவொரு கருத்து வேறுபாடும் இருக்காது. ஒற்றுமை உணர்வு தான் ஏற்படும். விட்டுக்கொடுக்கும் மனப்பான்னையும் வளரும். கட்சி பணியாற்றாமல் இருக்கும் ஒருவரை கட்சி பதவியில் அமரவைத்தால் அவரால் கட்சிக்கு எந்தபயனும் கிடையாது. உண்மையாக உழைப்பவர்களுக்கு கட்சி பதவிகள் கொடுத்தால் கட்சி வளருவதோடு நீண்ட காலத்திற்கு கட்சி நிலைத்திருக்கும் நிலைமை உருவாகும் என்றதோடு நாம் அனைவரும் கலைஞர் வழியில் வந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழியில் நடந்து ஒற்றுமையுடன் கட்சி பணியாற்றினால் தான்நாம் வரும் அனைத்து தேர்தலிலும் வெற்றி பெற முடியும்” என்று கூறினார்.