தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே ஓடையில் கட்டப்பட்ட தடுப்பணை கட்டப்பட்ட மூன்று ஆண்டுகளிலேயே உடைந்து நொறுங்கியது. தரமற்று கட்டப்பட்டதால் தடுப்பணை உடைந்ததாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அரண்மனை தேரி பகுதியில் கடந்த 2020 ஆம் ஆண்டு விவசாயத்திற்காகவும் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும் சுமார் 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தடுப்பணை ஒன்று கட்டப்பட்டிருந்தது. இந்நிலையில் அண்மையில் திடீரென தடுப்பணை உடைந்தது. வெளிப்புறம் சிமென்டால் பூசப்பட்டுள்ள நிலையில் உள்ளே வெறும் செம்மண் மட்டுமே இருந்தது விவசாயிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தரமற்ற முறையில் தடுப்பணையைக் கட்டிய ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். தற்பொழுது மழைக்காலம் நெருங்கி வருவதால் தாமதம் இல்லாமல் அதே இடத்தில் மீண்டும் தரமான தடுப்பணையைக் காட்டித் தர வேண்டும். எங்களுக்கு விவசாய வாழ்வாதாரமே இந்த தடுப்பணை தான் என அந்த பகுதி விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.