தமிழ்நாட்டில் கல்லூரிக்கல்வி இயக்குநரகம் கட்டுப்பாட்டின் கீழ் 784 கலை, அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் 91 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளும் அடங்கும். இவை தவிர உடற்கல்வி பயிற்சிக் கல்லூரிகள் 11, சமூக சேவை பயிற்சி மையங்கள் 2, ஓரியண்டல் கல்வி பயிற்சி மையங்கள் 4, கல்வியியல் கல்லூரிகள் 724 என மொத்தம் 1543 கல்லூரிகள் இயங்கி வருகின்றன.
கல்லூரி வளாகத்திற்குள் மாணவ, மாணவிகள் செல்போனில் அரட்டையில் மூழ்குவதால் அவர்களின் கல்வி நலன் பாதிக்கப்படுவதாகவும், தவறான செயல்களில் ஈடுபடுவதாகவும் உயர்கல்வித்துறை செயலருக்கு தொடர்ந்து புகார்கள் சென்றன.
இதையடுத்து, அனைத்து அரசு /உதவிபெறும் /சுயநிதி /பல்கலைகளின் கீழ் இயங்கும் கல்லூரிகளின் வளாகத்திற்குள் மாணவ, மாணவிகள் செல்போன் பயன்படுத்தக் கூடாது என தமிழ்நாடு கல்லூரிக்கல்வி இயக்குநர் சாருமதி உத்தரவிட்டுள்ளார். உயர்கல்வித்துறை செயலரின் (பொறுப்பு) அறிவுறுத்தலின்படி இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்படுவதாகவும், இது தொடர்பாக அனைத்துக் கல்லூரிகளின் முதல்வர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்புமாறு இணை இயக்குநர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.