தமிழகத்தின் பண்பாட்டு ஆய்வாளரும், பேராசிரியருமான தொ.பரமசிவன் (70) உடல்நலக் குறைவால் காலமானார். பாளையங்கோட்டை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் அவரது உயிர் பிரிந்தது.
தமிழில் இயங்கிவந்த முக்கியமான பண்பாட்டு மானுடவியல் ஆய்வாளர்களில் ஒருவராகத் திகழ்ந்தவர் தொ.பரமசிவன். 'அறியப்படாத தமிழகம்', 'பண்பாட்டு அசைவுகள்' போன்ற நூல்கள் அவரின் முக்கியப் படைப்புகளாகத் திகழ்கின்றன. தமிழ்ப் பண்பாட்டின் வேர்களைத் தனது நூல்களின் மூலம் தேடித்தந்தவர். அவரது 'அழகர்கோயில்' நூல், கோயில் ஆய்வுகளுக்கு முன்னோடி நூலாகத் தற்போது வரை திகழ்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அவரது மறைவுக்குப் பல்வேறு பிரபலங்களும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன், "தொ.பரமசிவன் மறைந்தார், வருந்துகிறேன். இன்னொரு தொ.பரமசிவன் உருவாகவேண்டும் என்று ஆவலாகக் காத்திருக்கிறேன். அடங்காத துயரம்" எனத் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
அதேபோல் கவிஞர் வைரமுத்து இதுகுறித்து வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில், பரமசிவனின் மறைவு தமிழ்ப் பண்பாட்டு உலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு எனக் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல், மிகவும் முக்கியமான ஒரு அறிஞரை இழந்திருப்பது வருத்தமளிக்கிறது என எழுத்தாளர் பெருமாள்முருகன் தெரிவித்துள்ளார்.