ஜெயலலிதா தங்கியிருந்த பகுதியில் சிசிடிவி கேமராக்கள் அணைத்து வைக்கப்பட்டது என அப்போலோ குழுமத்தின் தலைவர் பிரதாப் ரெட்டி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நேற்று சென்னையில் செய்தியாளர்களை சந்திந்த அவர்,
ஜெயலலிதாவுக்கு சிகிச்சை தர சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது. அப்போலோ மருத்துவர்கள் மற்றும் வெளிநாட்டு மருத்துவர்களும் சிறப்பான சிகிச்சை அளித்தனர். உடல்நலம் தேறி வருவதற்கு அத்தனை சிகிச்சைகளையும் அப்போலோ செய்தது.
அப்பல்லோ மருத்துவமனையைப் பொருத்தவரை, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளை நெருங்கிய உறவினர்கள் மட்டுமே பார்க்க அனுமதிப்போம். அவரது அறையில் பணியில் இருந்த மருத்துவர்களிடம் அனுமதி பெற்று உறவினர்கள் அவரைப் பார்த்திருக்கலாம். ஜெயலலிதாவை யார் சந்திக்க வேண்டும் என உடன் இருந்தவர்கள் கூறிய நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.
ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட பகுதியிலிருந்த அனைத்து கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாடுகளும் நிறுத்தி வைக்கப்பட்டன. அவர் அனுமதிக்கப்பட்ட பகுதியில், தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த நோயாளிகளும் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டனர். எல்லோரும் அவர் சிகிச்சை பெறுவதைப் பார்க்கக் கூடும் என்பதால் கேமராக்களின் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டன.
ஒரு நாள் சிகிச்சை அல்ல; பல வாரங்கள் சிகிச்சை தொடர்ந்து நடந்தது. எல்லா தகவலையும் ஆவணங்களையும் விசாரணை ஆணையத்தில் கொடுத்துள்ளோம். ஆணையத்திலிருந்து எப்போது அழைப்பு வந்தாலும் ஆஜராக தயாராக இருக்கிறோம் என அவர் தெரிவித்துள்ளார்.