காட்சிகள் மாறி கொண்டே இருக்கும், என்பதற்கு இந்த சட்டமன்றத் தோ்தல் ஒரு முன்னோட்டம். அதிலும் தி.மு.க. பெரும்பான்மையாக வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ள நிலையில், எதிர்க்கட்சி தலைவர் யார் என்பதில் அ.தி.மு.க.வுக்குள் தொடர்ந்து இழுபறியும், இ.பி.எஸ்.- ஓ.பி.எஸ். ஆதரவாளர்களிடையே வாக்குவாதமும், மோதலும் நிலவுகிறது. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் கரூர் மாவட்டத்திற்கு உட்பட்ட கிருஷ்ணராயபுரம் சட்டமன்றத் தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட சிவகாம சுந்தரி வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராகத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் கடந்த 2016- ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் கிருஷ்ணராயபுரம் சட்டமன்றத் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முன்னாள் எம்.எல்.ஏ. கீதா மணிவண்ணன் இன்று (09/05/2021) தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியை நேரில் சந்தித்து சால்வை அணிவித்து அவருக்கு வாழ்த்து கூறி, தன்னை தி.மு.க.வில் இணைத்துக் கொண்டார். இது கரூர் மாவட்ட அ.தி.மு.க.வினடரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.