உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள சென்னை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி எம்.எம்.சுந்தரேஷுக்கு உயர் நீதிமன்றத்தின் சார்பில் வழியனுப்பு விழா நடத்தப்பட்டது. தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி உள்ளிட்ட நீதிபதிகள் கலந்துகொண்ட விழாவில், தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் பிரிவு உபச்சார உரை நிகழ்த்தினார். அப்போது அவர், 24 ஆண்டுகளாக வழக்கறிஞராகவும், 12 ஆண்டுகள் நீதிபதியாகவும் சுந்தரேஷ் பணியாற்றியுள்ளார் எனவும், ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 563 க்கும் வழக்குகளில் தீர்ப்பளித்துள்ளார் எனவும் புகழாரம் சூட்டினார்.
நீதிபதி சுந்தரேஷ் தனது பதிலுரையில், பிறந்த வீட்டை விட்டு புகுந்த வீடு செல்லும் மணப்பெண்ணைப் போல, பள்ளி படிப்பை முடித்து மேல் படிப்புக்கு செல்லும் மாணவனைப் போல உணர்வதாக குறிப்பிட்டார். பிரிவு எப்போதும் சிக்கலானது தான் என்றாலும் வாழ்க்கை முன்னோக்கிச் செல்ல வேண்டும் எனக் கூறிய அவர், அனைவரையும் கண்ணியத்துடன் நடத்த வேண்டும் எனக் கூறினார். இதுவரை லட்சத்துக்கும் மேற்பட்ட வழக்குகளில் தீர்ப்பளித்திருந்தாலும், மனசாட்சிக்கு எதிராக ஒரு தீர்ப்பு வழங்கியதில்லை எனக் குறிப்பிட்டார். நீதிபதி சுந்தரேஷ் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளதால், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை 56 ஆக குறைகிறது. மொத்த நீதிபதிகள் எண்ணிக்கை 75 என்ற நிலையில், காலியிடங்கள்19 ஆக அதிகரித்துள்ளது.
நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் சென்னை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதிகளுள் ஒருவர் ஆவார். தற்பொது அவர் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஈரோட்டை சேர்ந்தவர். இவரது தந்தை மூத்த வழக்கறிஞர் வி.கே.முத்துசாமி ஆவார். 1985 வழக்கறிஞராக பணியாற்ற தொடங்கினார், மேலும் இவர் ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.சிவசுப்ரமணியத்திடம் ஜூனியராக பணியாற்றினார். 2009ல் 47 வயதில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட இவர் தற்போது 59 வயதில் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.