சட்டப்பேரவை கூட்டத் தொடரின் இரண்டாம் நாள் கூட்டம் இன்று (21.06.2024) காலை 10 மணிக்கு தொடங்கியது. அப்போது கள்ளச்சாராய சம்பவம் குறித்து விவாதிக்க அதிமுக உட்பட எதிர்கட்சிகள் சார்பில் வலியுறுத்தப்பட்டது. இதனையடுத்து சட்டப்பேரவையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் அமளியில் ஈடுபட்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து அதிமுக உறுப்பினர் அனைவரும் இருக்கையில் அமருமாறு சபாநாயகர் அப்பாவு வேண்டுகோள் விடுத்தார். இருப்பினும் அதிமுகவினர் தொடர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். மேலும் சபாநாகர் அப்பாவுவின் எச்சரிக்கை மீறி அதிமுகவினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் சட்டப்பேரவையில் இருந்து அதிமுக எம்.எல்.ஏக்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர்.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. சிகிச்சையில் இருப்பவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகின்றனர். இதனால் இறப்புகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் கள்ளச் சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 49 ஆக உயர்ந்துள்ளது. இதுவரையில் கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் 27 பேரும், சேலம் மருத்துவமனையில் 15 பேரும், விழுப்புரம் மருத்துவமனையில் 4 பேரும், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 3 பேர் என மொத்தம் 49 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 4 பெண்களும் அடங்குவர். மேலும் 89 பேர் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதே சமயம் தமிழகம் முழுவதும் காவல்துறையினர் கள்ளச்சாராய தடுப்பு நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளனர்.
இது தொடர்பாக சபாநாயகர் அப்பாவு பேசுகையில், “கவன ஈர்ப்பு தீர்மானத்தைப் பேச எதிர்க்கட்சிகளுக்கு அனுமதி மறுக்கவில்லை. சட்டப்பேரவை மாண்பைக் குலைக்கும் வகையில் நடந்துகொண்டதால் வெளியேற்றப்பட்டனர். சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்டோர் பேசியது எதுவும் பேரவை குறிப்பில் இடம்பெறாது. விதிகளை மீறி நடந்து கொண்டதால் ஒருநாள் மட்டும் பேரவை நடவடிக்கைகளில் பங்கேற்க முடியாது” எனக் குறிப்பிட்டார். மேலும் அமைச்சர் துரைமுருகன் பேசுகையில், “கள்ளக் குறிச்சி விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவை கேள்வி நேரம் முடிந்த பின்னரே விவாதிக்க முடியும். சட்டப்பேரவை விதிகளுக்கு உட்பட்டுதான் அனைவரும் நடந்து கொள்ள வேண்டும். விதிகளை தெரிந்தும் எதிர்க்கட்சிகள் இதுபோன்ற செயலில் ஈடுபடுகின்றனர். தவிர்க்க முடியாத காரணத்தாலேயே அதிமுகவினரை வெளியேற்ற உத்தரவிடப்பட்டது” எனத் தெரிவித்தார்.
இந்நிலையில் சட்டப்பேரவை வளாகத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். அப்போது அவர் பேசுகையில், “சட்டப்பேரவையில் கள்ளச்சாராய மரணம் குறித்து பேச சபாநாயகர் அனுமதி தரவில்லை. சட்டப்பேரவைத் தலைவர் நடுநிலையாக நடக்கவில்லை. கள்ளச்சாராய மரணம் குறித்து பேச அனுமதி வேண்டி தொடர்ந்து குரல் கொடுத்தோம் என்பதால் எங்களை பேரவையில் இருந்து வெளியேற்றியுள்ளனர்; மக்களின் பிரச்னையை பேசவிடாமல் எங்களை அடக்கி ஒடுக்க நினைக்கும் போக்கு கண்டனத்திற்குரியது. திறமையற்ற அரசாங்கத்தால் கள்ளச்சாராயம் அருந்தி பலரும் உயிரிழந்துள்ளனர். பொதுமக்கள் அதிகம் நடமாடும் மைய பகுதியில் 3 ஆண்டுகளாக கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளது.
கள்ளச்சாராய மரணத்திற்குப் பொறுப்பேற்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பதவி விலக வேண்டும், கள்ளச்சாராய மரணத்தை மறைக்க மாவட்ட ஆட்சியர் முயற்சி செய்தார். எங்களுக்குக் கிடைத்த தகவல்களின்படி கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் 50 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வந்துள்ளது. மேலும் கள்ளச்சாராயம் அருந்தி உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் மீதமுள்ள 16 பேரும் கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல் வந்துள்ளன. நாட்டை உலுக்கிய கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாகச் சட்டப்பேரவை தலைவர் அப்பாவுவிடம் பேரவையில் விவாதிக்க அனுமதி கோரினோம் ஆனால் இது குறித்துப் பேச அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
எங்களுடைய வேலை கேள்வி கேட்பது அதைக் கூடச் செய்ய விடவில்லை. கள்ளச்சாராயத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தமிழ்நாடு அரசு உரிய சிகிச்சை அளிக்கவில்லை. கள்ளச்சாராயம் அருந்தி தான் உயிரிழந்தார்கள் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்திருந்தால் பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து குணமடைந்திருப்பார்கள்.
அந்த மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சர் எ.வ.வேலு கள்ளச்சாராயம் தொடர்பாக தகவல் கிடைத்திருந்தால் தடுத்து இருப்போம் எனச் சொல்கிறார். ஆனால் அதிமுக எம்எல்ஏ செந்தில்குமார் கடந்தாண்டு மார்ச் 29 ஆம் தேதி கள்ளச்சாராயம் விவகாரம் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர கோரிக்கை வைத்தார். அதை ஏற்க வில்லை. அதைக் கவனித்திருந்தால் இந்தச் சம்பவத்தை தடுத்து இருக்கலாம். இந்த விவகாரம் தொடர்பாக திமுக கூட்டணிக் கட்சிகள் கண்டு கொள்ளவில்லை. மக்களைப் பற்றிக் கவலைப்படாத கூட்டணிக் கட்சிகள் அது. திமுக அரசுக்கு கூட்டணி கட்சியினர் துணை போகிறார்கள். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணை வேண்டும் எனக் கேட்கிறோம்” எனத் தெரிவித்தார்.