Skip to main content

பொன்.மாணிக்கவேல் வீட்டில் சோதனை; பிடியை இறுக்கும் சிபிஐ!

Published on 10/08/2024 | Edited on 10/08/2024
CBI raids Pon. Manickavel house

சென்னை பாலவாக்கத்தில் உள்ள சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் சிறப்பு அதிகாரியாக இருந்த பொன். மாணிக்கவேல் இல்லத்தில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஐ.ஜியாக இருக்கும்போதே இவர்மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்நிலையில் கடந்த 2008 ஆம் ஆண்டு அருப்புக்கோட்டை அருகே உள்ள ஆளடிப்பட்டி கிராமத்தில் ஆரோக்கியராஜ் என்பவரின் வீட்டில் அஸ்திவாரம் அமைக்கும் பணியின்போது 6 சிலைகள் கிடைத்துள்ளன. இந்த சிலைகளைக் கைப்பற்றிய சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவலர்கள் காதர பாட்ஷா, சுப்பராஜ் ஆகியோர் சிலைக்கடத்தல் வழக்குகளில் தொடர்புடைய தீனதயாளனின் உதவியோடு, சிலைகளை விற்று பணத்தை எடுத்துக் கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

சிலையைக் கடத்தி விற்பனை செய்த குற்றச்சாட்டுக்கு ஆளான  டிஎஸ்பி காதர பாட்ஷா, கோயம்பேடு சிறப்பு உதவி ஆய்வாளர் சுப்புராஜ் ஆகியோர் கடந்த 2017ம் ஆண்டு கைது செய்யப்பட்டனர். முன்னதாக 2017ம் ஆண்டு ஜூன் 29 -ஆம் தேதி காதர் பாட்ஷா பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதற்கிடையே சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவுக்குப் பொன்.மாணிக்கவேல் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட பின், நெல்லையில் பழம்பெரும் கோயில் சிலைகள் கடந்த 2007ம் ஆண்டு வெளிநாடுகளில் விற்கப்பட்டுள்ளன. இந்த சம்பவத்தில் டி.எஸ்.பி காதர் பாட்ஷாவுக்கு தொடர்பிருப்பதாகக் கண்டறியப்பட்டதை அடுத்து அவர் மீண்டும் 2019 ஆம் ஆண்டு  கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் காதர் பாஷா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தாக்கல் செய்தார். அதில் பழிவாங்கும் நோக்கில் தனக்கு எதிராகப் பொய் வழக்குப் பதிவு செய்த சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேலுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். மேலும் அவர் மனுவில், பழவலூர் சிலைக் கடத்தல் வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான தீனதயாளனை தப்பிக்க வைப்பதற்காக, அவருடன் கூட்டுச் சேர்ந்து அதிகார ரீதியில் தன்னை பழிவாங்கும் நோக்கிலும் தனக்கு எதிராகப் பொய் வழக்குப்பதிவு செய்ததாகவும், ஜாமீனில் விடுதலையான தன்னை மற்றொரு பொய் வழக்கில் சட்டவிரோதமாகக் கைது செய்து சிறையில் அடைத்ததாகவும் காதர் பாட்ஷா குற்றம் சாட்டியிருந்தார்.

உயர் நீதிமன்றத்தையும், சிறப்பு நீதிமன்றத்தையும் தவறாகப் பயன்படுத்திய பொன்.மாணிக்கவேல் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உள்துறை செயலாளருக்கும், டி.ஜி.பி.,க்கும் மனு அளித்ததாகவும், இதுவரை நடவடிக்கை எடுக்காததால் தன் புகாரின் அடிப்படையில் பொன்.மாணிக்கவேல் மீது சிபிசிஐடி வழக்குப்பதிவு செய்து விசாரிக்க உத்தரவிட வேண்டுமெனக் கோரிக்கை வைத்திருந்தார். இந்த மனுவை விசாரித்த  நீதிபதி ஜெயச்சந்திரன், ஓய்வுபெற்ற ஜ.ஜி பொன்.மாணிக்கவேல் மீதான புகார் மீது சி.பி.ஐ விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கக் கடந்த ஜூலை மாதம் உத்தரவிட்டுள்ளனர்.

மேலும்டிஐஜி அந்தஸ்துக்குக் குறையாத அதிகாரி விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர். இதனை அடுத்து டெல்லி சிபிஐ சிறப்புக் குற்றப் பிரிவு, கடந்த 2017 ஆம் ஆண்டு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஓய்வு பெற்ற டி.எஸ்.பி காதர் பாட்ஷா மற்றும் காவலர் சுப்புராஜ் மீது போடப்பட்ட வழக்கை அடிப்படையாக வைத்து சி.பி.ஐ முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி டி.ஐ.ஜி அந்தஸ்துக்கு குறையாத அதிகாரியை விசாரணைக்கு நியமிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது . அந்த அடிப்படையில் டி.ஐ.ஜி லவ்லி காட்டியார் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

குறிப்பாகச் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் இரண்டு பேர் ஒருவருக்கு ஒருவர் எதிராகக் குற்றம் சாட்டியுள்ளனர். இதில் உண்மை எது? பொய் எது? எனத் தெரியவில்லை. எனவே சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிகாரத்தைப் பயன்படுத்தி சி.பி.ஐ விரிவாக விசாரிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளனர். ஓய்வு பெற்ற ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் மற்றும் ஓய்வு பெற்ற டி.எஸ்.பி காதர்பாட்ஷா இருவரில் யார் குற்றவாளிகள் என்பதைக் கண்டறிந்து அறிக்கை தாக்கல் செய்யும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதன் அடிப்படையில் காதர் பாட்ஷா சுப்புராஜ் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தத் திட்டமிட்டுள்ளனர். மேலும் தொடர்புடைய சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் உள்ளிட்டோரிடமும் விசாரணை நடத்தத் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் ஓய்வு பெற்ற ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் இல்லத்தில் 6  சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர், மேலும் ஆவணங்கள் ஏதேனும் கைப்பற்றப்பட்டதா என்பது குறித்த முழு விவரங்கள் விசாரணை முடிவில் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

சார்ந்த செய்திகள்