![Village youths sweeping the lake ...](http://image.nakkheeran.in/cdn/farfuture/TVEqO3CIGow8jBnitCt9aiN3Fin0QJvWp0O2az_kLFU/1599127659/sites/default/files/2020-09/river-2.jpg)
![Village youths sweeping the lake ...](http://image.nakkheeran.in/cdn/farfuture/vGlpzT2P0ptNOnTYI49IhNOeMq11YiZ9_07OHKYdsEo/1599127659/sites/default/files/2020-09/river-1.jpg)
![Village youths sweeping the lake ...](http://image.nakkheeran.in/cdn/farfuture/PipMa1LtBALCrCi7o43tnpXVREhYSV7-z0O56Hnb8sc/1599127660/sites/default/files/2020-09/river-3.jpg)
![Village youths sweeping the lake ...](http://image.nakkheeran.in/cdn/farfuture/3zFkcQ7-7SAj72y7EQ7qPeteEO1mGmilQXtd1EvdDeU/1599127661/sites/default/files/2020-09/river-4.jpg)
பெரம்பலூர் மாவட்டம் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலை, ஒட்டியுள்ளது இருர்கிராம். இந்த கிராமத்தில் உள்ள விவசாயிகளுக்கு பிரதானமாக சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் பெரிய ஏரி ஒன்று உள்ளது அந்த ஏரியில் சீமை கருவேலமரங்கள் காட்டுச் செடிகள், வளர்ந்து மண்டிக் கிடந்தன. இந்த ஏரியை சுத்தம் செய்து தூர்வாரி கரையை செப்பனிட்டு மழைக்காலங்களில் வரும் தண்ணீரை தேக்கி வைத்து அதன் மூலம் அதை ஒட்டியுள்ள சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறும். ஆனால், பல ஆண்டுகளாக சரியான மழை இல்லாததாலும் அரைகுறையாக பெய்யும் மழைநீரை ஏரிக்கு கொண்டு வரும் வரத்து வாய்க்கால்கள் சீர்கெட்டு கிடதுள்ளது.
இந்த அவல நிலையை பார்த்து ஊர் இளைஞர்கள் ஒன்றுகூடி ஏரியை சுத்தப்படுத்த தூர்வாரி கரையை பலப்படுத்த வேண்டும் என்று முடிவு செய்தனர். அதற்காக மாவட்ட ஆட்சியர் முதல் பொதுப்பணித்துறை அதிகாரிகள் வரை பல்வேறு அதிகாரிகளுக்கு சீர் செய்து கொடுக்குமாறு மனு அளித்து வந்துள்ளனர். இவர்களது மனுவை அரசும் கண்டு கொள்ளவில்லை அதிகாரிகளும் ஏறெடுத்து பார்க்கவில்லை.
இனிமேல் அரசாங்கத்தை நம்பி பயனில்லை ஒன்றும் நடக்காது என முடிவு செய்த இளைஞர்கள் ஒவ்வொருவரும் அவர்களால் முடிந்த நிதியை கொடுத்தனர். அதோடு ஊர் மக்களிடமும் அவர்களால் இயன்ற அளவு பண உதவி செய்து தருமாறு கேட்டுள்ளனர். அப்படி கிடைத்த பணத்தை கொண்டு இவர்களே ஏரி செப்பனிடும் பணியை துவக்கியுள்ளனர். இது குறித்து இளைஞர்கள் மணி, அறிவழகன் ஆகியோர் கூறும்போது, இந்த ஏரியில் நீர்ப்பிடிப்பு ஏற்படுத்தினால் பெங்களூரைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் விவசாய குடும்பங்கள் பயன் பெறுவார்கள். இதன் மூலம் உணவு உற்பத்தி பெருகும் மேலும் ஏரியில் தண்ணீர் இல்லாததால் அருகில் உள்ள ஆழ்குழாய் போர்கள் பாசனக் கிணறுகளில் நீர் இல்லாமல் வறண்டு கிடக்கின்றன.
அந்த நிலையை மாற்ற வேண்டும் என்பதற்காக அரசு உதவியை எதிர்பார்த்து கிடைக்காததால் பொதுமக்கள் இளைஞர்கள் முயற்சியினால் ஏரி செப்பனிடும் பணி கடந்த 3 நாட்களாக நடைபெற்று வருகிறது. பணியை முழுமையாக செய்து முடித்த பின் மழை பெய்யும்போது, ஏரியில் தண்ணீர் தேங்கும். அதன்மூலம் விவசாயம் நடைபெறும். நீர் பெருகும் என்ற நம்பிக்கையோடு செயல்படுகிறோம் என்கிறார்கள் இளைஞர்கள் இருவரும். இளைஞர்களின் முயற்சியை கண்டு அப்பகுதியில் உள்ள கிராம மக்கள் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்து வருகிறார்கள்.