காவிரி நீருக்காக ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு அரசு அண்டை மாநிலமான கர்நாடகாவை எதிர்பார்த்துக் காத்திருப்பது தொடர்கதையாகிவருகிறது.
கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி, கர்நாடக மாநில அரசு ஆண்டுதோறும் 177.25 டி.எம்.சி. நீரை தமிழ்நாட்டிற்கு தர வேண்டும். ஆனால், அதன்படி ஒருமுறைகூட கர்நாடகா வழங்கியது இல்லை. அங்கு கனமழை பெய்யும்போது மட்டும், தமிழ்நாட்டிற்கு உபரி நீர் கிடைக்கிறது. நீர் பாசன ஆண்டான ஜூன் மாதம் முதல் மே மாதம் வரை மாதந்தோறும் தமிழ்நாட்டிற்கு எவ்வளவு நீர் வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக ஆகஸ்ட் மாதம் 45.95 டி.எம்.சி. நீர் வழங்க வேண்டும். செப்டம்பர் மாதம் 36.76 டி.எம்.சி.யும், ஜூலை மாதம் 31.24 டி.எம்.சி.யும், அக்டோபர் மாதத்தில் 20.22 டி.எம்.சி.யும் வழங்க வேண்டும் என்பது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளவை. ஆனால், நீதிமன்ற உத்தரவை கர்நாடகா அரசு பின்பற்றுவதில்லை. இந்த நிலையில், பருவமழை காரணமாக, கர்நாடகாவில் கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பும் தருவாயில் உள்ளதால், உபரி நீர் திறக்கப்பட்டுவருகிறது. இருப்பினும், தமிழ்நாட்டிற்கு ஜூன், ஜூலை மாதங்களில் வழங்க வேண்டிய 40 டி.எம்.சி. தண்ணீருக்குப் பதிலாக, இதுவரை 18 டி.எம்.சி. அளவுக்கு மட்டுமே தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அணை நிரம்புவதால் உபரி நீரைத் திறந்து, அதை தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய நீராக கணக்கிட்டுக்கொள்கிறது கர்நாடக அரசு. அதுமட்டுமின்றி, கர்நாடகாவைப் பொறுத்தவரை உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை பின்பற்றாத போக்கே தொடர்கிறது.
இன்னும் மூன்று தினங்கள் மட்டுமே உள்ள நிலையில், மீதமுள்ள 22 டி.எம்.சி. தண்ணீரைப் பெற தமிழ்நாடு அரசு, மத்திய அரசையும், காவிரி மேலாண்மை ஆணையத்தையும் அணுகி நமக்கான பங்கீனைக் கேட்டுப் பெற வேண்டும் என டெல்டா மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.