Skip to main content

முகிலன் உயிருடன் உள்ளாரா? சென்னையில் பல்வேறு அமைப்புகள் போராட்டம்

Published on 31/05/2019 | Edited on 31/05/2019

 

சுற்றுச்சூழலியல் ஆர்வலர் முகிலன். இவர் ஈரோடு மாவட்டம் சென்னிமலையைச் சேர்ந்தவர்.  கூடங்குளம் அணு உலைக்கு எதிராகவும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்திலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்தும்  மற்றும் காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கத்தில் இணைந்து மணல் கொள்ளைக்கு எதிராகவும் பல போராட்டங்களில் முன்னின்று பங்கேற்றார். 

 

m

 

சென்ற வருடம் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள் 13 பேரை போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்தி சுட்டு கொன்றது. இது சம்பந்தமான ஆவன படமொன்றை சென்னை பத்திரிகையாளர் சந்திப்பில் சென்ற பிப்ரவரி 15ந் தேதி வெளியிட்ட முகிலன் அன்று இரவிலிருந்து காணாமல் போனார்.


 
முகிலன் கடத்தப்பட்டார் என்றும்,  போலீஸ் அல்லது ஆலை அதிபர்கள், மணல் கொள்ளையர்களின் கூலிப்படை முகிலனை ஏதோ செய்து விட்டது என்றும் செய்தி வெளியானது.

 

இதையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவும் செய்யப்பட்டது. விசாரணை சி.பி.சி.ஐ.டி வசம் போனது.  ஆனால் முகிலனை கண்டு பிடிக்கும் முயற்சியல் எந்த முன்னேற்றமும் இல்லை. இந்த நிலையில் ஆட்கொணர்வு மனு வருகிற 6 ந் தேதி நீதிமன்றத்தில் வரவுள்ளது. இதற்கிடையே சி.பி.சி.ஐ.டி. போலீசார் தொடக்கத்தில் காணவில்லை என்று முகிலன் படத்தை போட்டு ஊர் முழுக்க போஸ்டர் ஒட்டியது. முகிலனோடு நட்பில் இருந்த சுமார் 400 பேரை விசாரித்ததாக போலீஸ் கூறியது.

 

 முகிலன் இருப்பிடம் பற்றி எந்த முன்னேற்றத்தையும் போலீஸ் கண்டுபிடிக்கவில்லை. இந்த சூழலின் பின்னனியில் தான் ஏற்கனவே முகிலனை மீட்க கோரி பல போராட்டங்கள் நடத்திய காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கம் நாளை 1 ந் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அரசுக்கு எதிராக மாபெரும் ஆர்பாட்டம் நடத்துகிறது. கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு தலைமையில் பழ.நெடுமாறன், தி.மு.க. துணை பொதுச் செயலாளர் சுப்புலட்சுமிஜெகதீசன், மார்க்ஸ்சிஸ்ட் கே.பாலகிருஷ்ணன், சி.பி.ஐ. சி.மகேந்திரன், காங்கிரஸ் கோபன்னா,  ம.தி.மு.க. மல்லை சத்யா, வி.சி.க. திருமாவளவன், த.வா.க.வேல்முருகன் உட்பட முப்பதுக்கும் மேற்பட்ட அமைப்புகள் இந்த ஆர்பாட்டத்தை நடத்துகிறது. 


என் கணவர் உயிருடன் இருக்கிறாரா? தமிழக அரசே பதில் சொல்  என்ற கேள்வியுடன் முகிலன் மனைவி பூங்கொடியும் இதில் கலந்து கொள்கிறார். 


முகிலன் காணாமல் போய் 115 நாட்கள் ஆகிறது.  வழக்கு விசாரணை வரும் 6ந் தேதி.  போலீஸ் நீதிமன்றத்தில் என்ன பதில் சொல்லப் போகிறது என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
 

சார்ந்த செய்திகள்