" உணவுப்படி என்பது தற்பொழுது வரை எங்களுக்கு எட்டாக்கனியே.! கண்ணில் காட்டப்படாமல் அதிகாரிகளால் சுரண்டப்படும் இந்த உணவுப்படியினை கேரள பெருவெள்ள நிவாரணத்திற்கு விட்டுத் தருகின்றோம். எங்களது உதவித் தொகையாக அங்கேயாவது சேர்ப்பித்து விடுங்கள். மனிதமாவது பிழைக்கட்டும்." என தமிழக அரசுக்கு பணிவான வேண்டுகோளை விடுத்துள்ளனர் காவலர்கள்.
" அரசாணை ஏழாவது ஊதிய குழுவின் அரசாணை எண் 306ன் படி, சென்னையில் பணியாற்றும் காவலர்களுக்கு மாதம் 26 நாட்களுக்கு 300 ரூபாய் வீதமும், சென்னையை தவிர்த்து மற்ற மாவட்டங்களுக்கு மாதம் 6 நாட்களுக்கு 250 ரூபாய் வீதமும் வழங்க ஆணையிடப்பட்டது. மழை, வெள்ளம் பார்க்காமலும், சாலையிலும், காடுகளிலும் பந்தோபஸ்து எனும் பெயரில் பணி செய்யும் காவலர்களுக்கு சென்னை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உணவுப்படியே கொடுப்பதில்லை. எப்பொழுது கேட்டாலும், இப்பொழுது தருகின்றோம் என்ற ஒற்றைப் பதிலை வைத்து சமாளித்து விட்டு, இந்தப் பக்கம் உணவுப்படி கொடுத்ததாக காந்தி கணக்கு எழுதி சுரண்டி வருகின்றனர் மேல்மட்டத்திலுள்ள அதிகாரிகள். இதுக்குறித்து தற்பொழுது வரை பல முறை புகார்களும் எழுந்து வருகின்றது. ஆனால், முடிவு தான் எட்டவில்லை. இந்நிலையில், தற்போது மழையினால் பெரிதும் பாதிக்கப்பட்ட கேரளா மாநிலத்திற்கு தமிழக அரசின் மூலம் அரசு ஊழியர்களின் ஒருநாள் சம்பளம் பிடித்தம் செய்வதாக அறிவித்துள்ளார்கள். அது போல், எங்களிடமிருந்து யாரோ சுரண்டி திருடும் உணவுப்படிக்கான பணத்தை வெள்ள நிவாரண நிதிக்கு அளிக்கின்றோம். இப்பொழுதாவது உண்மையான கணக்கு வெளிப்படட்டுமே."!!! அதனால் தான் வெள்ள நிவாரண நிதிக்கு எங்களுடைய உணவுப்படியினை தருகின்றோம் என்றிருக்கின்றோம். தமிழக அரசு இதனை கோரிக்கையாக ஏற்று ஆவண செய்ய வேண்டுகிறோம்." என கோரிக்கை விடுத்துள்ளனர் தமிழக காவலர்கள். இதனால் காவல்துறை மத்தியில் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது.